மத நம்பிக்கைகளால் கொரோனாவை துரத்த முடியுமா?

08 Nov, 2020 | 09:03 PM
image

'ஒரு பக்கம் மத நம்பிக்கைகளில் ஈர்க்கப்பட்டு  ஆசிர்வதிக்கப்பட்ட நீரை ஆற்றில்  கொட்டி வரும் அரசாங்கம் மறுபக்கம் முஸ்லிம்களின் இறுதி சடங்கு குறித்த அவர்களின்  மத பண்பாடுகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதேன்’

-சிவலிங்கம் சிவகுமாரன்

இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதை,  பேரினவாத சிந்தனை கொண்டவர்கள் அவ்வப்போது  தமது செயற்பாடுகளால்  கடந்த காலங்களில் நிரூபித்து வந்துள்ளார்கள். அதில் பிரதான இடம் பிடித்த விடயங்களாக  பெளத்த  மத அனுட்டானங்கள், அது தொடர்பான நம்பிக்கைகள் மற்றும் பெளத்த பீடங்களுக்கு அரசாங்க உயர்மட்ட தலைவர்கள் வழங்கும் மரியாதை போன்றவற்றை கூறலாம்.

நாட்டின் அரசியல் விவகாரங்களை முன்னெடுப்பது பற்றியே நாட்டின் ஜனாதிபதி பெளத்த பீடங்களின் ஆலோசனைகளைப் பெறும் போது அவர்களின் வலிமை புரிகின்றது. இந்நிலையில் அவ்வாறானதொரு மத அனுட்டானம் கொரோனா தொற்றை நாட்டிலிருந்து அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் நேரடியாக சுகாதார அமைச்சரே கலந்து கொண்டமை எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கும் சமூக ஊடகங்களின் கேலிக்கும் உள்ளானது.

ஆசிர்வதிக்கப்பட்ட புனித நீர் கொண்ட மண்குடத்தை ஆற்றில் போட்டதற்கே இந்த விமர்சனங்கள். இதில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னயாராய்ச்சி மட்டுமின்றி ஆளுந்தரப்பு அமைச்சரான பிரசன்ன ரணதுங்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 இப்படி செய்தால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா , அல்லது கொரோனா நாட்டை விட்டு சென்று விடுமா என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் மத அனுட்டானங்களில் உள்ள தனது நம்பிக்கை காரணமாகவே தான் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா தெரிவித்துள்ளார். 

கடவுளின் நம்பிக்கையைப் பெறவே நான் அவ்வாறு செய்தேன் என்று கூறிய அவர்   அதற்கும் ஒரு படி மேலே சென்று அவர் உணர்ச்சிவயப்பட்டு ‘கடலில் குதித்தால்  வைரஸ் இல்லாது போகும் என்றால் அதற்கும் நான் தயார்’ என்றும்   தெரிவித்துள்ளார்.

ஆற்றில் கொட்டப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்ட  நீர் தொடர்பில் சமூக ஊடகங்களில் கேலியான பதிவுகள் அதிகரிக்க மறுபக்கம் பாணந்துறை கடற்கரை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் பிரதான காரணமானது. பாணந்துறை கடற்பகுதியில் 2 ஆம் திகதி திமிங்கலங்கள் கரையொதுங்கத் தொடங்கின. அதில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்தன. அவற்றை மீண்டும் கடலுக்குள் விடும் செயற்பாடுகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டன. சுகாதார அமைச்சர் ஆற்றில் கொட்டிய நீர் கடலை சென்றடைந்து இவ்வாறு திமிங்கலங்கள் கரை ஒதுங்குகின்றன என பல  கேலியான பதிவுகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தன என்பது முக்கிய விடயம்.

பிரதமரின் நம்பிக்கை

மத அனுட்டானங்கள்,  சோதிடம் போன்றவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தானும் ஒரு முயற்சியை எடுத்துள்ளார். புத்தசாசனம் உட்பட ஏனைய சகல மத அலுவல்கள் தொடர்பான அமைச்சை தனக்குக் கீழ் கொண்டிருக்கும் பிரதமர், நாட்டில் கொரோனாவை ஒழிப்பதற்கு அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பணித்துள்ளார். 

Daily Mirror - Mahinda at 70 A historic leader, authentic hero

அதன் படி  25 மாவட்டங்களிலுமுள்ள சைவ ஆலயங்களில் இன்று 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு  மிருத்தியஞ்ச ஹோமம் நடத்தப்பட வேண்டும் என  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மிருத்தியஞ்ச ஹோமம் என்பது சிவனுக்காக செய்யப்படும் மகிமை வாய்ந்த ஹோமமாகும். ஆரோக்கியமான வாழ்வுக்கும், அகால மரணங்களை தடுப்பதற்கும், நீண்ட நாள் தொடரும் நோய்கள் அகலுவதற்கும் இது செய்யப்படுகின்றது. 

மத நம்பிக்கைகள் மதிக்கப்படல் வேண்டும். எதில் எந்த மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமில்லை. வெவ்வேறு மதங்களை பின்பற்றுவோர் வித்தியாசமான நம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். எனினும் நாட்டிலுள்ள அனைத்து மத சம்பிரதாயங்களும் மதிக்கப்படல் வேண்டும் என்பதோடு அவற்றை பின்பற்றுவதற்கு எந்த தடைகளும் ஏற்படாத வண்ணம் அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதுவும் ஒரு ஜனநாயக செயற்பாடாகும்.  எனினும் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் இந்த நாட்டின் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகள் பற்றி அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்கின்றதோ என கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு ஆரம்பத்திலிருந்தே அம்மக்கள் தமது எதிர்ப்பை காட்டி வருவதுடன் ஜனாஸாக்களை எரிப்பது தமது மதத்துக்கு எதிரான ஒரு செயற்பாடு என்றும் இது தம்மை அவமதிக்கும் செயல் என்றும் கூறி வருகின்றனர். 

எனினும் அது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவே அரசாங்கத் தரப்பிலிருந்து பதில் வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் அமைச்சர் அலி சப்ரி, இது குறித்து விசேட கவனம் எடுத்து வருவதாக மட்டுமே கூறியுள்ளார். வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம் இனத்தவரை தகனம் செய்ய வேண்டாம் என அச்சமூகத்தினர் இவ்வருட ஆரம்பத்திலிருந்து வேண்டுகோள்களை விடுத்து வருகின்றனர் என்பது முக்கிய விடயம்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை  தகனம் செய்ய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை.  வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகள் எவ்வாறு இடம்பெற வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ள விதிமுறைகள் பின்வருமாறு உள்ளன,

  • இறுதிச் சடங்குகளின்போது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடக் கூடாது.
  • உயிரிழந்தவரின் உடலுக்கு கூடிய விரைவில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட வேண்டும்.
  • உயிரிழந்தவரின் உடல் மத நடைமுறைகளின்படி, தகனம் செய்யப்பட வேண்டும் அல்லது அடக்கம் செய்யப்பட வேண்டும்.
  • கொரோனாவால்   உயிரிழந்தவரின் உடல் எந்தவொரு உறவினர் அல்லது தெரிந்தவர்களால் கோரப்படாவிட்டால் மட்டுமே அது தகனம் செய்யப்பட வேண்டும்.
  • தகனம் செய்யும் போது மாசு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மின்சார தகனம் பொருத்தமானது.

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவும் என்பது குறித்து இதுவரை எந்த மருத்துவ பதிவுகளும் இல்லை என்பது முக்கிய விடயம். ஆகவே இலங்கையில் மட்டும் ஏன் இவ்வாறு தனிப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன என்பது பற்றி உலக சுகாதார ஸ்தாபனமும் கேள்வி எழுப்பவில்லை.  

 கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் மும்பை மாநகராட்சியானது ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டது. கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவ்வுடல்கள் தகனம் செய்யப்பட வேண்டுமே ஒழிய அவற்றை எக்காரணங்கள் கொண்டும் புதைக்க முடியாது என அறிவித்திருந்தது. எனினும் இது மதரீதியான முரண்களை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்ததால் அந்த அறிக்கை பின்னர் வாபஸ் வாங்கிக்கொள்ளப்பட்டது.

தற்போதும் கூட இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவியோரின் உடல்கள்  அவரவர் மத விதிமுறைகளின் படி சுகாதார வழிமுறைகளை  பின்பற்றி அடக்கமோ தகனமோ செய்யப்படுகின்றன. 

ஒரு நாட்டில் வாழ்ந்து வரும் சிறுபான்மையினரின்  உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும் என்கிறார் இந்தியாவின்  சிறுபான்மை நலத்துறை மத்திய அமைச்சர் நவாப் மாலிக். 

இலங்கையில் சிறுபான்மையினருக்கென தனியான அமைச்சுக்கள் இல்லாவிட்டாலும் கூட அரசாங்கத்தின் பக்கமிருக்கும் சிறுபான்மை தரப்பு அமைச்சர்கள், எம்.பிக்கள் இது குறித்து அழுத்தமாக பேசுவார்களா? 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right