“மேல் மாகாணத்தை விட்டு வெளியேறி சென்றவர்களின் மூலம், தொற்று எல்லா இடங்களுக்கும் பரவும் சூழல் ஏற்பட்டால்,  அரசாங்கம் அந்தப் பழியை தப்பிச் சென்றவர்கள் மீதே போட்டு தப்பித்து விடும்”

 

-கார்வண்ணன்

குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடிய கதையாக முடிந்து போனது, மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்.

மினுவங்கொட கொத்தணி உருவானதும், கம்பஹா மாவட்டத்தில் ஒவ்வொரு பொலிஸ் பிரிவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், மாவட்டம் முழுவதற்கு விரிவுபடுத்தப்பட்டது.

பெலியகொட கொத்தணியில் தொற்று  பரவத் தொடங்கியதும், கொழும்பிலும் ஒவ்வொரு இடமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

பிரதேச மட்ட ஊடங்கு தான் பிறப்பிக்கப்படும் என்று கூறிக் கொண்டிருந்த அரசாங்கம், ஒரு கட்டத்தில் மேல் மாகாண முழுவதற்கும் ஊரடங்கைப் பிறப்பிக்க முடிவு செய்தது.

அந்த முடிவை அரசாங்கம், குறுகிய கால இடைவெளிக்குள் பிறப்பித்திருக்க வேண்டும்.

ஒக் டோபர் 29ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு தொடக்கம், திங்கட்கிழமை அதிகாலை வரை ஊரடங்கு என்று, 27ஆம் திகதியே அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது.

Sri Lanka retailers appeal for 50-pct rent cut as most shops closed |  EconomyNext

இது, நிலைமையை அவசரமாக கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு போலத் தெரியவில்லை.

அவ்வாறான ஒன்றாக இருந்திருந்தால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும். அல்லது குறைந்தபட்சம் ஐந்து ஆறு மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதற்கு மாறாக அரசாங்கம் கிட்டத்தட்ட 40 மணி நேர அவகாசத்தை கொடுத்து ஊரடங்கு சட்டத்தை அறிவித்தது.

நான்கு நாட்கள் ஊரடங்கு என்றதும் கிடைத்த விடுமுறையை எங்காவது போய் அனுபவிப்போம் என்று எதிர்பார்த்திருந்தவர்களும்,   இங்கிருந்து தப்பித்தால் போதும் என்று கருதியவர்களும்,  மேல் மாகாணத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.

ஒக்டோபர் 28ஆம் திகதி காலையிலேயே பொதுமக்கள் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறத் தொடங்கியிருந்தனர் என்பது அரசாங்கத்துக்கு நன்றாக தெரிந்திருந்தது.

அதனால்தான் இராணுவத் தளபதி எவரையும் மேல் மாகாணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், ஏனைய பகுதிகளுக்கு தொற்றைக் கொண்டு போய் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்க்கமானவை; இராணுவத் தளபதி - Jvpnews

அதுபோல பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹணவும்,  மேல் மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிக்கை விடுத்தார்.

அதனை பொதுமக்கள் கண்டுகொள்ளவில்லை.  அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். 

இந்தச் சூழலில் கொழும்பு நகரத்தை விட்டு வெளியே செல்லும் முக்கிய வீதிகளில், 29ஆம் திகதி காலையிலேயே பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தினர்.

ஆனால் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் கூட ஆயிரக்கணக்கான வாகனங்கள் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிச் சென்று கொண்டிருந்தன.

இதனால் கொழும்புக்கு வெளியே செல்லும் அதிவேக நெடுஞ்சாலைகள், வீதிகள் அனைத்தும் வாகனங்களால் நிரம்பியிருந்தன.

ஒக்டோபர் 29 ஆம் திகதி மாத்திரம் 80 ஆயிரம் வாகனங்கள் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றன என்று கூறப்படுகிறது.  

இந்த வாகனங்களில் தலா இரண்டு பேர் பயணித்திருந்தால் கூட, அவர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டும்.

Sri Lanka reports five Covid deaths amid curfew - The Hindu

அதிகபட்சம் ஐந்து பேர் என்று கணக்கிட்டால், 4 இலட்சம் பேர் வெளியேறியதாக கருதலாம்.

குறிப்பிட்ட ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதை அறிந்திருந்தும், அரசாங்கம் அதனை தனது படைகளை வைத்து தடுக்கவில்லை.

எல்லா வாகனங்களும் வெளியே சென்ற பின்னர் தான்,  லாயத்தை மூடி விட்டோம் என்பது போல அரசாங்கம் கதை விட்டு கொண்டிருந்தது. 

இவ்வாறு வெளியே செல்பவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியவர்களாக கணிக்கப்படுவர் என்றும்,  அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறிக் கொண்டிருந்தார்.

இங்கு முக்கியமான விடயம்,  சிறைத்தண்டனையோ அபராதமோ அல்ல.   அவர்களை பிடித்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதால் இப்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதுமில்லை.

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறி சென்று உள்ளவர்களால் ஏற்படக் கூடிய தொற்று அபாயம் தான் மிகப்பெரியது.  பிரதானமாக கவனிக்கப்பட வேண்டியது.

Sri Lanka capital, surrounding areas go into lockdown after virus surge

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்கள்  எத்தனை பேர் என்பது யாருக்கும் தெரியாது. அவர்களை இப்போது தங்கியிருக்கும் வீடுகள் இடங்களிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.

இது எந்த வகையிலும் நிலைமையை சீர்படுத்த உதவும் போல தெரியவில்லை.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே,  அது காலவரையற்றதாக நீடிக்கும் என்று முன்னரே கூறியிருந்தால், சுற்றுலாவுக்காக சென்றவர்கள், வீடுகளிலேயே தங்கியிருந்திருப்பார்.

நான்கு நாள் விடுமுறை என்றதும் தான், பயத்தில் ஓடியவர்களும் களிப்பில் ஓடியயவர்களும்  அதிவேக நெடுஞ்சாலைகளை நிறைத்திருந்தார்கள்.

இப்போது என்னதான் சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், கைது செய்து சிறையில் அடைக்கப் போவதில்லை,  என்பது இப்போது எல்லோருக்கும் தெளிவாக தெரியும்.

அந்தளவுக்கு பேரைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கு, தனிமைப்படுத்திப் பராமரிப்பதற்கு போதிய வசதிகள் கிடையாது. 

இவர்களைக் கைது செய்யப் போய்,  பொலிஸார் மற்றும் ஏற்கனவே உள்ள கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளையும் அபாயத்துக்குள் தள்ளுவதை விட, மாற்று உபாயங்களைத் தான் கையாள வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.

முன்கூட்டியே ஊரடங்குச் சட்டத்தை அறிவித்து-தொற்று அபாயத்தை நாடெங்கும் கொண்டு செல்வதில் அரசாங்கத்துக்கு இருந்த பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஒருவேளை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறி சென்றவர்களின் மூலம், தொற்று எல்லா இடங்களுக்கும் பரவும் சூழல் ஏற்பட்டால்,  அரசாங்கம் அந்தப் பழியை தப்பிச் சென்றவர்கள் மீதே போட்டு விடும்.

அவர்களுக்கு அந்தப் பொறுப்பு இல்லை என்று கூற முடியாது

ஆனால், இந்த விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாகவே நடந்து கொள்கிறது. ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்கமாட்டோம் என்று அரசாங்கம் கூறியது. பின்னர் ஊரடங்கை அறிவித்தது.

அதுபோல், 2ஆம் திகதிக்குப் பின்னர்  ஊரடங்கு நீடிக்கப்படாது என்று  இராணுவத் தளபதி கூறிக்கொண்டிருந்தார்.   ஆனால் அவரே பின்னர் ஒருவாரத்துக்கு நீடிப்பதாக அறிவிப்பை வெளியிட்டார்.

கொரோனா தொற்றின் முதலாவது அலையிலிருந்து அரசாங்கம் பாடங்களை படிக்க தவறிவிட்டது என்பதுதான் உண்மை. இதேபோன்றதொரு தவறு தமிழகத்திலும் இடம்பெற்றது.

அங்கு ஆரம்பத்தில் தொற்று பெரும்பாலும் சென்னை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குள் தான் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. முடக்க நிலையை அறிவித்த அரசாங்கம் அதனை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறியது.  

அதனால் சென்னையில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களை நோக்கி புறப்பட்டுச் சென்றார்கள்.  அவ்வாறு சென்றவர்கள் கூடவே கொரோனாவையும் அழைத்துச் சென்று கிராமங்கள் வரைக்கும் பரப்பினார்கள்.

அதன் விளைவில் இருந்து தமிழகம் பல மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் மெதுமெதுவாக மீண்டு கொண்டிருக்கிறது.

அருகிலுள்ள தமிழ்நாடு கற்று கொண்ட பாடத்தை கூட இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது அவ்வாறு படித்திருந்தால்,  குதிரைகள் ஓடும் வரை லாயத்தை திறந்து வைத்திருந்திருக்காது.