கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸின் தாய்மாமனார் கோபாலன் பாலச்சந்திரன் 2021 ஜனவரி 20 நடைபெறவிருக்கும் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்குத் திட்டமிடுகின்றார்.


'கமலாவுடன் நேற்று பேசினேன். குடும்ப விவகாரங்கள் சம்பந்தப்பட்ட பேச்சாகவே அது அமைந்தது. எந்தவொரு அரசியல் கேள்வியையும் நான் தொலைபேசியில் அவரிடம் கேட்கவில்லை. ஜனவரி 20 பதவியேற்பு வைபவத்திற்கு அமெரிக்கா செல்ல உத்தேசித்திருக்கிறேன்' என்று இந்திய - அமெரிக்க உறவுகள் தொடர்பான விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவரான பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

எந்தவொரு பெற்றோரையும் போன்றே கமலா ஹரிஸை நான் உற்சாகப்படுத்துவேன். நல்ல பணிகளைச் செய்யுமாறு தொடர்ந்து ஆலோசனை கூறுவேன். எந்தவொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு கூறுவதையே நானும் கமலாவுக்கு கூறுவேன். அவர் திறமையாகச் செயற்படுகின்றார்.

அவர் எதையாவது தவறாகச் செய்தால், அதைத் திருத்திக்கொள்ளுமாறு நிச்சயமாக அறிவுரை கூறுவேன். ஆனால் எனக்கும் அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது. நல்ல பணிகளைச் செய்வதை உறுதியுடன் தொடருமாறு நிச்சயமாக நான் ஆலோசனை கூறுவேன் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

'தேர்தல் பற்றிய விபரங்களை - தரவுகளை நான் ஆராய்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தேன். கமலா வெற்றிபெறப்போகிறார் என்பதைத் தெரிந்திருந்தேன்.

என்றாலும் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை காத்துக்கொண்டிருந்தேன். எந்தக் கவலையும் இல்லாமல் நித்திரை செய்தேன். கமலாவின் வெற்றியில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் ஜோ பைடன் உத்தியோக பூர்வமாக பதவியேற்கும் வைபவம் 2021 ஜனவரி 20 நடைபெறும். அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான மிகவும் நெருக்கமான போட்டியில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஜோ பைடன் ஜனாதிபதியாகும் போது கமலா ஹரிஸ் அமெரிக்காவின் முதலாவது பெண் துணை ஜனாதிபதியாக வருவார்.

பைடன் - கமலா அணியிடமிருந்து அமெரிக்கர்கள் பெரும் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெற்றியை அமெரிக்கர்கள் இரவிரவாகக் கொண்டாடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று கமலாவின் மாமனார் கூறினார்.

டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலத்தின்போது துண்டிக்கப்பட்ட பல்வேறு சர்வதேச உறவுகளை பைடனின் வெற்றி மீளக்கட்டியெழுப்பும் என்று நம்பிக்கை வெளியிட்ட பாலச்சந்திரன், 'ட்ரம்ப் நிர்வாகம் வெளியேறிய பல சர்வதேச உடன்படிக்கைகளில் பைடன் மீண்டும் இணைந்துகொள்வார். ஈரானுடனான அணு உடன்படிக்கை, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம், பாரிஸ் பருவ நிலை உடன்படிக்கை எல்லாவற்றுக்கும் பைடன் மீண்டும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ரீதியில் பாரிய மாற்றங்கள் இடம்பெறப் போகின்றன.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பலமான உறவுகள் இருக்கின்றன. அந்த உறவுகள் பெரும் உத்வேகத்தைப் பெற்றிருக்கின்றன. அதே திசையில் உறவுகள் தொடரும்' என்று பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.