(நா.தனுஜா)

அமெரிக்காவின் உபஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டதைப்போன்று இனம், மதம் ஆகியவற்றைப் புறந்தள்ளி திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவு செய்யப்போகின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் உபஜனாதிபதியாக கமலா ஹரிஸும் தெரிவாகியிருக்கின்றனர். 

அமெரிக்காவின் முதலாவது பெண் உபஜனாதிபதி என்ற பெருமையை கமலா ஹரிஸ் தனதாக்கியிருக்கும் நிலையில், உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளது.

அவ்வாறு தனது வாழ்த்துக்களை வெளிப்படுத்தும் விதமான மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

'நம்மைச்சார்ந்த பெண்ணொருவர் உலகிலேயே மிகவும் பலம்பொருந்திய பெண்ணாக மாறியுள்ளமை தெற்காசியாவைச் சேர்ந்த அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க விடயமாகும். இதனைப்போன்று இனம், மதம், சாதி போன்றவற்றை விடுத்து திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவுசெய்யப்போகின்றது?' என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.