ட்ரம்பின் குற்றாச்சாட்டுகளுக்கு மத்தியில் வாக்கெண்ணும் பணிகள் நிறைவைடைந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள 20 தேர்தல் வாக்குகளையும், நெவாடா மாகாணத்தில் 6 வாக்குகளையும் ஜோ பைடன் கைப்பற்றியதையடுத்து  290 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். 

அதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக விரைவில் 77 வயதான ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

இவ் வெற்றிக்களிப்பினை ஜோ பைடனின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடுவதை அந்நாட்டு ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.

PHILADELPHIA: People celebrate outside the Pennsylvania Convention Center where votes had been counted

இந்நிலையில்,ஜோ பைடன்  அமெரிக்கர்கள் அனைவருக்குமான ஜனாதிபதியாக இருப்பேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரவித்தள்ளார்.

ஜோ பைடனின்  குறித்த டுவிட்டர் பதிவில் மேலும், 

‘ அமெரிக்கா, நமது மிகச்சிறந்த நாட்டை வழிநடத்த நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தற்காக நான் பெருமைப்படுகிறேன். 

நம் முன் கடினமான வேலைகள் உள்ளன. ஆனால், நான் உங்களிடம் வாக்குறுதி அளிக்கிறேன்.. நீங்கள் எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கவில்லை என்றாலும் நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான ஜனாதிபதியாக இருப்பேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்ற மகிழ்சியை, ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்து கொண்டார்.

ஜோ பைடனுக்கு தொலைபேசி மூலம் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்த காணொளியை, கமலா ஹாரிசின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், ஜோ பைடனுடன் பேசிய கமலா ஹாரிஸ், ‘நாம் சாதித்து விட்டோம்... நாம் சாதித்து விட்டோம் ஜோ.. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி நீங்கள் தான்..’ என்றார்.

இதனையடுத்து, ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி  வேட்பாளரான கமலா ஹாரிஸ் அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக பெண் துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

அத்துடன் அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் ஒருவர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இவர்கள் இருவருக்கும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில்,

நண்பரான ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸூக்கும் வரலாற்றுசிறப்பு மிக்கதும்  தீர்க்கமானதுமான வெற்றியை பெற்றுள்ளதாக குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.