கம்பஹா மாவட்டத்தில் இன்று (07) மாலை 4.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 201 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் மிகாரா ஏபா தெரிவித்தார்.

 

இவ்வாறு பதிவான கொரோனா தொற்றாளர்களில் கம்பஹா மாவட்டத்தின் ஜா-எலா சுகாதாரப் பிரிவை சேர்ந்த 28 நோயாளிகளும், மஹர பிரேத சபைக்கு  உட்பட்ட 32 நோயாளிகளும், கம்பஹா பிரேத சபைக்கு உட்பட்ட 11 நோயாளிகளும்,  அடங்குவதாக வைத்தியர் மிகாரா ஏபா மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,853 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை,  கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டு வாரியத்திற்குச் சொந்தமில்லாத 27 தொழிற்சாலைகளில் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான 200 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கம்பஹா பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் உறுதிப்படுத்தினார். 

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் இதுவரை, 54,474 பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் மிகாரா ஏபா தெரிவித்தார்.