(செ.தேன்மொழி)

திருகோணமலை - உப்புவேலி பகுதியில் பெண்ணொருவர் தனது நான்கு பிள்ளைகளுக்கு உணவில் நஞ்சு கலந்துக்கொடுத்து தானும் தற்கொலை செய்ய தாயொருவர் முயற்சித்துள்ளார்.

இதன்போது 16 வயதுடைய  பெண் பிள்ளை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், அந்த பெண்ணும் அவருடைய மற்றைய மூன்று பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்புவேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை காலை, பெண்ணொருவர் தனது 4 பிள்ளைகளுக்கும் நஞ்சு கலந்த உணவை கொடுத்துவிட்டு, தானும் அந்த நஞ்சு கலக்கப்பட்ட உணவை உண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது இவர்கள் அனைவரும்,திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் குறித்த பெண்ணின் மூத்த பிள்ளையான, 16 வயதுடைய பெண் பிள்ளை ஒன்று உயிரிழந்துள்ளதுடன்,ஏனைய மூன்று பெண் பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை ,33 வயதுடைய இந்த பிள்ளைகளின் தாயான பெண்ணும் ஆபாத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த பெண்ணுக்கும், கோயில் ஒன்றில் பூசகராக செயற்பட்டு வரும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே, அந்த பெண் தனது பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு ,தானும் அந்த விஷத்தை  உண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை உப்புவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.