எமது நாட்டில் இந்த வருடம் மார்ச் மாதமளவில் கொரோனா தொற்று ஆரம்பித்த போது உள்ளுராட்சி நிறுவனம் என்ற  ரீதியில் அட்டன்-டிக்கோயா நகரசபையின் ஊடாக பிரதேச மக்களை பாதுகாக்கும் பொருட்டு தொடர்ச்சியாக பல்வேறு நோய்த்தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால் இன்று சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்மை விமர்சிக்கின்றனர்.

இந்த இக்கட்டான நெருக்கடி நேரத்தில் ஒத்துழைப்பு தர வேண்டுமே ஒழிய குறை கூறி திரியக்கூடாது என அட்டன் டிக்கோயா நகர சபைத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.  நகரசபை நிர்வாகத்தின் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

வைரஸ் தொற்று ஆபத்து நகருக்குள் வரும் முன்னரே நகர வீதிகள் மற்றும் பொது இடங்களை நாளாந்தம் தொற்றுநீக்கி மூலம் சுத்திகரிக்கப்பட்டது.  சகல குடியிருப்புப் பகுதிகளும் உள்ளக வீதிகளும் தொற்று நீக்கப்பட்டன. மேலும் எமது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வாயிலாக வெளி மாவட்டங்களில் இருந்து நகர பிரதேசத்திற்கு வருகை தந்தோரை இனங்கண்டு அவர்களை மக்களின் நலன் கருதி உடனடியாக தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலம்,ரஅட்டன் பொலிஸ் நிலையம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக எமது பிரதேசத்துக்கு வெளிப்பிரதேசங்கள் மற்றும் வெளிநாடுகள் ஆகியவற்றிலிருந்து நகர பிரதேசத்துக்கு வருகின்ற நபர்களை கண்காணித்து அவர்களுக்குத் தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் தேவையான போது தனிமைப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டது. 

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் நகருக்கு வருகின்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சுகாதார வழிகாட்டுதல்களை ஒலிபெருக்கிகள் மூலம் வழங்கியிருந்தோம். ஊரடங்கு சட்டம் அமுலாகிய தருத்தணத்தில் நகர பிரதேச மக்களுக்கு அவர்களின் தேவை கருதி அத்தியாவசியப் பொருள்களும் மருந்து வகைகளையும் விநியோகித்து வந்தோம். இந்த நடைமுறையை நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி சபைகளில் அட்டன்-டிக்கோயா நகரசபையே முதன்முதலாக அமுலாக்கியது.

எதிர்பாராதவிதமாக மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து ஆரம்பித்த இரண்டாவது கொரோனா அலையால் பேலியகொடை மீன்சந்தைத் தொகுதியும் கடுமையான நோய்த்தொற்றுக்கு இலக்கானது. 

பேலியகொடை தொற்று பற்றி அறிந்தவுடன் உடனடியாக அட்டனிலுள்ள சகல மீன் விற்பனை நிலையங்களையும் ஒக்டோபர் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். அதன் பின்பு ஒக்டோபர் 25ஆந் திகதி முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட அன்றைய தினமே அவரது மீன் கடையும் சகல சந்தைக் கடைத் தொகுதிகளும் மூடப்பட்டன.

முதலாவது தொற்றாளரின் தொடர்புடன் 10 நோயாளிகள் அடையாளங் காணப்பட்டதும் நிலைமையின் அபாயம் உணர்ந்து உடனடியாக பொதுச் சுகாரதார காரியாலயம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியவற்றை தொடர்பு கொண்டு நோயாளிகளின் தொடர்புப் பட்டியலை தயாரிப்பதற்கு உயரிய ஒத்துழைப்பை வழங்கியிருந்தோம்.

முதல்தடவையில் மேற்கொள்ளப்பட்ட 25 பிசிஆர் பரிசோதனையில் 11 நோயாளிகள் அடையாளங் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நோயாளர் தொடர்பு பட்டியல் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர்களுள் அத்தியவசியமானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தற்போது வரை 150 இற்கும் மேலதிகமான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் எவரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகவில்லை. நோய்த் தொற்று சங்கிலி இதனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிஇ பொலிஸ் அதிகாரிகள்இ பிரதேச செயலகம், அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர் காரியாலயம் போன்ற அரச அமைப்புகளின் பங்களிப்புடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களினதும் நகர வர்த்தகர்களினதும் அரச, தனியார் நிறுவனங்களினதும் பூரண ஒத்துழைப்பு பெறப்பட்டிருந்தது. இதுவே ஓர் உள்ளுராட்சி அமைப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அதிகார வரம்புக்குள் மேற்கொள்ளக்கூடிய உச்சபட்ச நடடிவக்கையாகும்.

இந்தத் தருணத்தில் நாம் எடுத்துள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வித அடிப்படைக் காரணங்களுமின்றி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் முன்னாள் நகர சபை தலைவரும் தற்போதைய உறுப்பினருமான டாக்டர் நந்தகுமார்.  அவர் நகரசபையின் தலைவராக கடமையாற்றிய காலத்திலேயே பொருத்தமில்லாத இடங்களில் மீன் கடைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது.  

நகர சபை முகங்கொடுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கூட்டப்படும் செயற்குழுக்கூட்டங்களுக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்காது வெறுமனே மாதாந்த பொதுச்சபைக் கூட்டத்துக்கு வருவதால் ஒன்றும் நடந்து விடாது. 

நிர்வாக ரீதியாகவும் சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனத் தலைவர் என்ற ரீதியாகவும் சகல நடவடிக்கைளும் கிரமாமாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை மாதம் ஒருமுறை நகரசபைக்கு வருகின்ற உறுப்பினர்கள் அறிந்து கொள்ளாதிருப்பது ஆச்சரியமல்ல.