கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமாக அதிகரித்து வருகின்றது. மாவட்டத்தின் பிரதான நகரங்களை மையப்படுத்திய பிரதேச செயலகங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். 

அந்தவகையில், தெரணியகலையில் நேற்று 3 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். கடந்த  2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று கிடைக்கப்பட்ட நிலையில் அதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவற்றில் தெரணியகலை வித்தியாலய மாவத்தை, உடபொல, மாலிபொட தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தொற்றாளர்களாக  உறுதிசெய்யப்பட்டுள்ளனர். இந்த தொற்று பேலியகொடை மீன்சந்தை கொத்தனி பரவலோடு சம்பந்தபட்டதாக அறிய முடிகிறது.

தெரணியகலையில் கடந்த 2ஆம் திகதி முதலாவது தொற்றாளர் மாலிபொட தலாவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டார். இவருக்கு பேலியகொடை மீன்சந்தையுடன் சம்பந்தப்பட்ட அவிசாவளையில் தொற்றுக்குள்ளான மீனவருடன் தொடர்பை பேனியதால் தொற்றுறுதியாகியதாக தெரணியகலை பிரதேச சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். 

அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 12வயது சிறுவனும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

கேகாலை மாவட்டத்தில் நேற்று மாலை வரை மொத்தமாக 151  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.