(எம்.ஆர்.எம்.வஸீம்)

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு பஸ் சங்கங்கள் கோரியிருக்கின்றபோதும் தற்போதைய நிலையில் பஸ் கட்டணம் அதிகரிக்க எந்த தீர்மானமும் இல்லை. என்றாலும் கொவிட் போக்குவரத்து கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணங்களில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டாலும் அது தற்காலிகமானதாகும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பஸ் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை தனியார் போக்குவரத்து சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய நிலைமையில் பஸ் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றபோதும், பஸ் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

பஸ் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் அந்த சங்கங்களுடன் கலந்துரையாடி, ஒரு சில இணக்கப்பாடுகளுக்கு வந்திருக்கின்றோம். அதன் பிரகாரம் எதிர்வரும் வாரங்களுக்குள் கொவிட் போக்குவரத்து கொள்கை ஒன்றை தயாரிக்க இருக்கின்றோம்.

சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய கொவிட் 19 கொள்கையின் பிரகாரம் பஸ் வண்டிகள் போக்குவரத்தில் ஈடுபடும்போது பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலாக அவதானம் செலுத்தப்படும்.

அத்துடன் கொவிட் போக்குவரத்து கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணங்களில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டாலும், கொவிட்  அச்ச நிலைமை இல்லாமலாகி இருப்பதை உறுதிசெய்யப்பட்ட பின்னர், பஸ் கட்டணம் மீண்டும் முன்னர் இருந்த பிரகாரம் அறவிடப்படும்.

ஏனெனில் தற்போதைய நிலைமையில் பயணிகள் தொடர்பாக கவனம் செலுத்துவதுபோல் பஸ் உரிமையாளர்கள் தொடர்பாகவும் நியாயமாக சிந்திக்கவேண்டும். அதன் பிரகாரம் இரண்டு தரப்பினரும் சங்கடமான நிலைமைக்கு ஆளாகாதவகையில் தீர்மானம் மேற்கொள்வேண்டி இருக்கின்றது. 

அத்துடன் தற்போது இடம்பெற்றுவரும்  கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 6ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதன் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்துகள் நிறுத்தப்படும்.

உயர்தர பரீட்சை காரணமாகவே ஊரடங்கு காலப்பகுதியிலும் பஸ் மற்றும் புகையிரத சேவைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் அந்த சேவைகள் இடம்பெறவேண்டிய தேவை இருக்காது என்றார்.