யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களும் சிறுவன் ஒருவனுக்குமே இவ்வாறு கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவரின் உறவினர்கள் மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் – 19 தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களிடம் செய்யப்பட்ட பரிசோதனையில் மேலும் 3 பேருக்கு தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.