(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு, எதிர்காலத்தில் உள்நாட்டுப் பொருளாதார மீட்சி மற்றும் மீளெழுச்சியின் வேகத்தைத் தீர்மானிக்கும் மிகமுக்கிய காரணியாக உள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.

'அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள் - 2020 இன் முக்கிய பண்புகளும் 2021 இற்கான வாய்ப்புக்களும்' என்ற தலைப்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது,

உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இவ்வருடம் பன்மடங்கான சமூக, பொருளாதார சவால்களையும் நிச்சயமற்ற தன்மைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டது.

இதன் விளைவாக இலங்கை பொருளாதாரம் கடந்த வருடங்களை விடவும் தாழ்ந்த பொருளாதார வளர்ச்சியையே அனுபவித்தது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகள், உலகளாவிய ரீதியில் மந்தகரமான பொருளாதார செயற்பாடுகள், பாதகமான காலநிலை மாற்றங்கள் போன்றவற்றினாலும் இவ்வருடத்தின் முதற்காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் 1.6 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது.

எனினும் கடந்த அக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் பரவத்தொடங்குவதற்கு முன்னதாக, பொருளாதார செயற்பாடுகளின் பல்வேறு விடயப்பரப்புக்களிலும் வலுவானதொரு மீட்சியை அவதானிக்க முடிந்தது. 

வைரஸ் பரவலினால் வீழ்ச்சிகண்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பெரிதும் பங்களிப்புச்செய்துள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் பொருளாதாரம் மீளெழுச்சியடையும் என்றும் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்ட அரசாங்கத்தின் கொள்கைகள் அதற்குத் துணைபுரியும் என்றும் எதிர்பார்க்கின்றோம். எதுஎவ்வாறெனினும் எதிர்காலத்தில் உள்நாட்டுப் பொருளாதார மீட்சி மற்றும் மீளெழுச்சியின் வேகத்தைத் தீர்மானிப்பதில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாடு மிகமுக்கிய காரணியாக இருக்கின்றது என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.