இலங்கை போக்குவரத்துச் சபையின் பதுளை டிப்போவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எட்டுப் பேரும் அவர்களின் குடும்பத்தினரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இ.போ.ச. பதுளை டிப்போவில் வழமையாக பயணிப்பவர்களுக்கான மாதாந்த பருவகாலச்சீட்டுக்களை  வழங்குபவர் மற்றும் பஸ் நடத்துனர்களிடமிருந்து நாளாந்தம் பெறும் பணத்திற்கான பொறுப்பாளர் உள்ளிட்ட எட்டுப்பேரும், அவர்களின் குடும்பத்தினரும், தத்தம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

இத்தகவலை பதுளை மாநகர சபை பொது சுகாதாரப் பணியகத்தினர் வெளியிட்டனர்.

கொரோனா தொற்றாளரான பொலிஸ் உத்தியோகத்தரொருவர்  கொழும்பிலிருந்து மேற்படி இ.போ.ச. பதுளை டிப்போ ஊழியர் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் குறித்த தகவல்கள் பதுளை மாநகர சபை பொது சுகாதாரப் பிரிவிற்கு கிடைத்ததையடுத்து பொது சுகாதாரப் பிரிவினர் விரைந்து இ.போ.ச. பதுளை டிப்போ ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சுய தனிமைப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றுடன்  துளைக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கெதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொது சுகாதாரப் பணியகத்தினர் தெரிவித்தனர்.