அட்டன் நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஆனால்  நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு மக்கள் சகஜமாக நடமாடுகின்றனர்.

இது குறித்து நகர சபைத் தலைவர் எந்த நடவடிக்கைளையும் மேற்கொள்ளாது அமைதி காத்து வருகின்றார்.

இக்கட்டான நேரங்களில் நிர்வாகம் செய்ய முடியாது தடுமாறும் இவர் பதவி விலக வேண்டும் என அட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான டாக்டர் அழகமுத்து நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

கடந்த மாதம் 25 ஆம் திகதியிலிருந்து இது வரை அட்டன் பிரதேசத்தில் 12 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் நகரசபை நிர்வாகம் முடங்கிப்போயுள்ளது.

இது வரை நகர சபை உறுப்பினர்களை அழைத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி நகர சபைத்தலைவர் எந்த ஆலோசனைகளையும் பெறவில்லை.

இராணுவ தளபதியால் அட்டன் நகர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பது பற்றி தற்போதைய நகர சபை நிர்வாகத்துக்கு தெரியவில்லை.

முதல் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட மீன் வர்த்தகரின் கடைப்பகுதி தொற்று நீக்கம் செய்யப்பட்ட போது அவரது கடையில் உள்ள மீன்கள் தரவளை மயானத்தில் கொட்டப்பட்டுள்ளன. அப்பிரதேசத்திலுள்ளவர்கள்  மனிதர்கள் இல்லையா ? நகர வர்த்தகர்கள் வியாபாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் இதன் பின்னால் உள்ள ஆபத்தை அவர்கள் உணர வேண்டும். தீபாவளி வியாபாரத்தை முன் கூட்டியே செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தமது கடைகளுக்கு யார் வருகின்றார்கள் என்ற ஆபத்தை அவர்கள் மறந்து விடுகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தை மீள இயங்க வைத்தது யார் என்ற கேள்விக்கு எவருக்கும் பதில் தெரியவில்லை. பொலிஸாரும் தமக்குத் தெரியாது என்று கையை விரிக்கின்றனர்.

அப்படியானால் நகர மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நகரசபை நிர்வாகம்  என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பது புரியவில்லை.

பெளசர்களில் நகரெங்கும் கிருமி நாசினியை தெளித்தால் எல்லாம் முடிந்து விட்டது என்ற அர்த்தம் அல்ல.  நெருக்கடியான தருணத்தில் நகர சபையை நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் அவர் பதவி விலகுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.