2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்கெண்ணும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் பெற்றிராத அதிகபடியான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையையும் கடந்து அவர் இந்த சாதனையை பதிவுசெய்துள்ளார்.

அதன்படி நவம்பர் 4 ஆம் திகதி வரை (உள்ளூர் நேரம்) ஜே பைடனுக்கு 70.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.

இது அமெரிக்காவில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இதுவரை பெறாத அதிகபடியான வாக்குகளின் எண்ணிக்கை என்று அந் நாட்டு தேசிய பொது வானொலி (NPR) கூறியுள்ளது.

2008 ஆம் ஆண்டில் ஒபாமா 69 மில்லியன் வாக்குகளைப் பெற்று முந்தைய சாதனையை படைத்திருந்தார். 2008 ஆம் ஆண்டில் ஒபாமா பெற்றதை விட ஜோ பைடன் ஏற்கனவே 300,000 க்கும் அதிகமான வாக்குகளை வென்றுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக வெள்ளை மாளிகையில் நடந்த கடுமையான தேர்தல் வாக்குப் போராட்டத்தில் ஜோ பைடன், மக்கள் வாக்குகளில் குடியரசுக் கட்சித் தலைவரை விட 2.7 மில்லியன் வாக்குகளால் தற்போது முன்னிலையில் உள்ளார். 

ஜனாதிபதி தேர்வு செய்ய அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க ஜனாதிபதி தேர்வாக முடியும்.

தற்போது வரையில் ஜோ பைடன் 264 பேரின் வாக்குகளையும், ட்ரம்ப் 214 பேரின் வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.