நாட்டில் இன்னொரு ஆயுத போராட்டத்தை தடுக்கும் வகையிலும் இன ஐக்கியத்தை பலப்படுத்துவதற்குமான  தேவை உள்ளது. இதற்காக நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே புதிய அரசியல் அமைப்பே பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. 

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. நாம் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் விரும்பாத எதையும் எம்மால் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது. ஆகவே இவர்களின் கதைகளை நம்பி நாட்டில் மக்கள் குழப்பமடைய அவசியம் இல்லை என்று கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.  

அடுத்த வருட ஆரம்பத்தில் உத்தேச அரசியல் அமைப்பை பாராளுமன்றத்தில் முன்வைப்போம். அதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும்  அவர் கூறினார்.  

புதிய அரசியல் அமைப்பு நாட்டில் பிரிவினையின் ஏற்படுத்துவதாகவும், அதிகாரப்பகிர்வு சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் வினவியபோதே  லக்ஸ்மன் கிரியல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,  

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரதான இரண்டு கட்சிகள் மட்டுமல்லாது சகல கட்சிகளும் சிந்தித்து வருகின்றன. சகல கட்சிகளின் பிரதிநிதித்துவங்களும்   இதில் உள்ளன. அதேபோல் உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பின் மூலம் நாட்டின் ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும், பெளத்த கொள்கைக்கும், சிங்கள மக்களின் உரிமைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனினும் சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதை போலவே தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். கடந்த கால முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில்  நிரந்தரமாக நாட்டின் அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்ட வேண்டும். ஆகவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

நாட்டில் இன்னொரு யுத்தம் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நாம் இடமளிக்க மாட்டோம். அதற்காகவே புதிய அரசியல் அமைப்பின்மூலம் தீர்வை பெற்றுக்கொடுக்க விரும்புகின்றோம். எனினும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலும், இன்னொரு யுத்தத்தை எதிர்பார்த்தும் ஒருசிலர் செயற்படுகின்றனர். நாட்டில் அமைதி நிலவுவதையும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் உருவாவதையும் இவர்கள் விரும்பவில்லை. 

தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதில் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அவரது இனவாதக் குழுக்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. தமிழ் மக்களின் உரிமைகளையும், அவர்களின் நிம்மதியையும் பற்றி சிந்தித்திருந்தால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்த  சில காலத்திலேயே தீர்வை பெற்றுக்கொடுத்திருப்பார்கள். தமது அரசியல் வாழ்க்கையை தக்கவைக்கும் வகையில் இனவாதத்தை பரப்பவே இவர்கள் முயற்சிக்கின்றனர். அதற்காகவே இப்பொது உருவாக்க முயற்சிக்கும் புதிய அரசியல் அமைப்பினை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். 

13ஆம் திருத்தத்தை கொண்டுவந்து வடக்கிற்கு அதியுச்ச அதிகாரங்களை வழங்கவும், வடக்கு கிழக்கை இணைந்து தமிழ் பிராந்தியம் ஒன்றை உருவாக்கிக் கொடுக்கவும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது எனவும் கூறுகின்றனர். ஆனால் இவை எதிலும்  உண்மை அல்ல. அதிகாரப்பகிர்வு என்ற விடயம் முக்கியமானதாகும். ஆனால் 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று ஒரு அதிகாரப்பகிர்வை நாம் ஒருபோதும் சிந்தித்துப் பார்க்கவில்லை. 

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சியின் போது 13ஆம் திருத்ததிற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவதாக வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். அவற்றை மறந்துவிட்டு இன்று நாம் கொடுக்காத வாக்குறுதிகளை விமர்சித்து வருகின்றனர். அதேபோல் வடக்கு கிழக்கு இணைப்பு எப்பது ஒருபோதும் சாத்தியமற்றது. நாம் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் விரும்பாத எதையும் எம்மால் கட்டாப்படுத்தி திணிக்க முடியாது. ஆகவே இவர்களின் கதைகளை நம்பி நாட்டில் மக்கள் குழப்பமடைய அவசியம் இல்லை. 

மேலும் இப்போது வரையிலும் எமது உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பில் ஆராயப்பட்டு புதிய திருத்தங்கள்  உருவாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வருடம் முதல் காலாண்டு பகுதிகளுக்குள் பாராளுமன்றத்தில் உத்தேச அரசியல் அமைப்பை முன்வைப்போம். அதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.