(நா.தனுஜா)

பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வுகூடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பரிசோதனைகளை முன்னெடுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அவசிமான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வலியுறுத்தினார்.

இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தினால் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போது சமுதாயத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்கும் போது அசௌகரியம் ஏற்படுமா? என்பது போன்ற சந்தேகங்கள் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. 

அத்தோடு சிலர் உயிரிழந்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போதே அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. எனவே இங்கு பரிசோதனைகளை மேற்கொள்வதில் குறிப்பிடத்தக்க தாமதமொன்று காணப்படுகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படினும் கூட பலர் அதனை வெளிப்படுத்தாமல் இருப்பது அண்மைக்காலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்த பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள். 

அதனால் அவர்கள் விரைவில் மரணமடையக்கூடிய சாத்தியப்பாடு உயர்வாகக் காணப்படுகின்றது. அதேபோன்று பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் சுகாதாரத்துறைசார் பணியாளர்கள் களைப்படைதல் மற்றும் விசனமடைதலும் முக்கியமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. அவர்களது நலன் மற்றும் அவர்களுக்கான வசதிகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

அடுத்ததாக பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான வாய்ப்புக்கள் தவறவிடப்பட்டிருக்கின்றன. அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து நாம் வெளிப்படுத்தியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

 குறிப்பாக தேசிய வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுப்பதற்கான இரசாயன ஆய்வுகூடமொன்றை உருவாக்காமை தொடர்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.

 அதுமாத்திரமன்றி ஒவ்வொரு மாவட்டங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான ஆய்வுகூடங்களை உருவாக்குவது அவசியமாகும் என்றும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

 எனினும் அதனையும் அரசாங்கத்திடம் ஊதியம்பெறும் உரிய சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கவனத்திற்கொள்ளாமையின் விளைவாக அவர்கள் தமது கடமையிலிருந்து தவறியிருக்கிறார்கள். இதுகுறித்து சுகாதார அமைச்சு பொறுப்புக்கூறுவதுடன் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியிருந்தது. எனினும் அதனை சிலர் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை மாத்திரம் உயர்த்துதல் என்று தவறாக அர்த்தப்படுத்திவிட்டார்கள். 

ஆனால் உண்மையில் உடல்வெப்பப்பரிசோதனை, பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் ஏனைய பரிசோதனைகள் அனைத்துமே இதிலடங்கும். ஆகவே எந்தெந்தப் பரிசோதனைகளை எப்போது மேற்கொள்ள வேண்டும் என்ற ஓர் ஒழுங்குமுறைப்படுத்தலை இப்போதேனும் தயாரிக்குமாறு நாம் சுகாதார அமைச்சிடம் வலியுறுத்துகின்றோம் என்றார்.