(செ.தேன்மொழி)

அரசாங்கத்திற்கு வயிற்று பசியை விட அதிகார பசியை போக்குவது தொடர்பிலேயே அக்கறை இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான நடவடிக்கைகளின் போது  சுகாதார தரப்பினரை முன்னிறுத்தியே செயற்பட வேண்டும் என்றும், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் வைரஸ் பரவல் தொடர்பில் அக்கறை கொள்ளாமல் இருந்ததால் தற்போது அது சமூகப்பரவலாக மாறியுள்ளது. இந்நிலையில் ஒரு மாதகாலமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவில்லை. இதேவேளை ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானங்கள் எடுப்பதிலும் தோல்வியடைந்தே உள்ளார்.

வைரஸ் தொடர்பான செயற்பாடுகளின் போது அது தொடர்பில் விளக்கம் பெற்ற வைத்திய நிபுணர்களுக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும். பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்காக ஒருவரை அழைத்துச் செல்லும் போது அங்கு சுகாதார தரப்பினரையே அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு  சுகாதார தரப்பினர் செல்லாததன்  காரணமாகவே விசேட தேவையுடைய இளைஞன் ஒருவன் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளான். 

இதன்போது தாதி ஒருவர் அங்கு சென்றிருந்தால் அவர் அந்த விசேட தேவையுடைய இளைஞன் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருப்பார். இந்த நிலைமை இனி ஒருவருக்கும் ஏற்படக் கூடாது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை குற்றவாளிகளை போன்று பார்ப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. அரிசியல்வாதிகளின் தேவை யற்ற தலையீடுகளின் காரணமாகவே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தொடர்பான செயற்பாடுகளின் போது மனித நேயம் என்பது மிக அவசியமாகும். இந்நிலையில்,பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். என்றார்