( செ.தேன்மொழி )

 ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பொருளாதார முகாமைத்துவம் வெற்றிக் கண்டுள்ளதா? தோல்வியடைந்துள்ளதா? என்றும் இந்த முகாமைத்துவம் தொடர்பில் மக்கள் திருப்தி அடைந்துள்ளனரா? என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் முகங்கொடுக்க நேரிடிம் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படாவிட்டால், ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ள முடியாது போகும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சர்வதேச கடன்களை செலுத்துவதில் இலங்கை அரசாங்கத்திற்கு சிக்கல் ஏற்படும் என்று சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளன என்று நாங்கள் பல முறை  அறிவுறுத்தியுள்ள போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவில்லை.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்காமல் அரசாங்கம் அதனை மூடி மறைத்து வருகின்றது. மக்களை இவ்வாறு ஏமாற்றி வருவதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.

ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமது தரப்பில் கல்விமான்களும், புத்திஜீவிகளும் இருப்பதாக காண்பிக்க முயற்சித்தாலும், அவரது முகாமைத்துவ திட்டங்கள் பயனுள்ளதாக இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ஆரம்பத்தில் உரிய திட்டமின்றி வரி குறைப்பை செய்ததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கொரோனா வைரஸ் பரவலுடன் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச கடன்களை செலுத்துவதற்காக நாம் குறிப்பிட்ட காலத்திற்கு டொலர்களை சேமித்து வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வழமையான நிலைமையை விட மாறுப்பட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கேற்ப  எமது செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தான் ஏனைய நாடுகளும் செயற்படுகின்றன. இந்நிலையில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளின் மத்தியில் இலங்கை வரவேற்கத்தக்க இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. எனினும் அரச வருமானத்தில் 70 சதவீதம் தொகையை சர்வதேசத்திடம் பெற்றுக் கொண்ட கடன்களின் வட்டியை மாத்திரம் செலுத்துவதற்கு பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 மாதங்களுக்கு  மாத்திரம் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டு மக்களுக்கு உண்மையை மறைப்பதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

இதேவேளை கடனை செலுத்துவது தொடர்பில் சர்வதேச நிதியத்துடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். அதேபோன்று நாம் கடன்களை பெற்றுக் கொண்டுள்ள நாடுகளுடன் கலந்துரையாடி காலவகாசம் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அதற்கு இன்னமும் முடிவு கிடைக்கவில்லை. 

இதேபோன்று சீனாவிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆனால் இன்னமும் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.