(க.பிரசன்னா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையிலும் மலையக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோல்வியடைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மலையக மக்களுக்கு வழங்கியிருந்தார்.

1000 ரூபா சம்பள அதிகரிப்பு, மலையகத்துக்கான தனியான பல்கலைக்கழகம் போன்றவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதிகளில் இன்று தோல்வியடைந்திருக்கின்றார்.

கடந்த ஒரு வருடமாக 1000 ரூபா சம்பளவுயர்வும் கிடைக்கவில்லை. வீடமைப்புத் திட்டமும் கிடைக்கவில்லை. மலையக மக்கள் பயணிக்கும் வீதிகளை காபட் இடுவதற்காக எங்களால் ஒதுக்கப்பட்ட நிதி முடக்கப்பட்டிருக்கின்றது. மடுல்சீமையில் மாதோவ பாதை, அடாவத்தை பாதை, வெரலவத்தை பாதை, இதல்கஸ்ஹின்ன - அப்புத்தளை பாதை, தம்பேத்தனை பாதை போன்றவற்றின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மலையக மக்களுக்கு எல்லாவற்றையும் தருவதாக வாக்குகளை பெற்றுக்கொண்டவர்களால் மலையக மக்கள் இன்று நிர்க்கதிக்கு ஆளாகியிருக்கின்றார்கள். பெருந்தோட்டங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ் வண்டிகள் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. தம்பத்தனை தோட்டம், ரொசட் தோட்டம், ஸ்பிரிங்வெளி, தெம்மோதரை, அடாவத்தை, அப்புத்தளை பிரதேசம் ஆகியவற்றில் அரச போக்குவரத்து வசதிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.