பொது எதிரணியினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்துகின்றனர். எதிர்வரும் 28ஆம் திகதி பொது எதிரணியினர் நடத்தவுள்ள பாதயாதிரை தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொது எதிரணினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று பிற்பகல் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பொது எதிரணியின் அனைவரையும் சந்திக்காது குறித்த ஒரு சிலருடன் மற்றுமே ஜனாதிபதி இந்த சந்திப்பை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெஹலிய ரம்புக்வெல, உதயங்க வீரதுங்க, டலஸ் அழகபெரும, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பொது எதிரணியின் முக்கிய சிலருக்கு இந்த சந்திப்பிற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும் பொது எதிரணியினர் எதிர்வரும் 28ஆம் திகதி நடத்தவுள்ளதாக கூறப்படும் பாதையாதிரை தொடர்பில் கலந்துரையாட இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த சந்திப்பு தொடர்பில் பொது எதிரணியின் உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவிடம் வினவியபோது,

பொது எதிரணியின் உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக எமக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. எனினும் காரணம் என்னவென்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 28ஆம் திகதி பொது எதிரணியினர் நடத்தவுள்ள பாதயாத்திரை தொடர்பில் கலந்துரையாட இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என நம்ப முடியும். எவ்வாறு இருப்பினும் இப்போது நாம் முன்னெடுக்கவுள்ள பாதயாத்திரையை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும் ஜனாதிபதி எமக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி கொடுத்துள்ளார். அரசாங்கம் விடும் தவறுகளை விமர்சிக்க எமக்கு அனுமதி வழங்கியுள்ளார். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருசில செயற்பாடுகள் ஜனாதிபதிக்கு பிடிக்கவில்லை.

வட்வரி விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள், அரசியல் அமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தனிச்சையான போக்கு, விலையேற்றம், மத்தியவங்கி ஆளுநர் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஜனாதிபதி முரண்பட்டுள்ளார்.

ஆகவே எமது இந்த பாதையாதிரையை ஜனாதிபதி தடுத்து நிறுத்தப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.