அண்மைக் காலமாக மத்திய சுகாதார அமைச்சும் மருத்துவர்களும் தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்வதையும் அதை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தடுத்துநிறுத்த முயன்று வருவதையும் பார்க்கிறோம்.

தெல்லிப்பளையை தவிர்ந்த அனைத்து விருத்தியடைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் வருகின்றன. அதனால் அந்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்குப் புற்று நோய் சிகிச்சைக்குரிய விலை உயர்ந்த மருந்துகள் மத்திய அரசாங்கத்தின் நிதியில் போதிய அளவு வழங்கப்படக்கூடியதாக உள்ளது.

அதேவேளை மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் சிறிதளவு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீடானது தெல்லிப்பளையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு போதுமானதாக இல்லாத நிலையில் தான் தமிழ் மருத்துவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் அவலநிலையை போக்குவதற்கு மத்திய அரசின் கீழ் இந்தப் பிரிவை கொண்டு வருவதற்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள்.

ஒருபுறம் 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை தீர்க்கவில்லை என்றும் அதை முற்றாக நிராகரிக்கிறோம் என்று கூறும் தமிழ் கட்சிகள் மறுபுறம் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கபபட்ட அதிகாரத்தை குறைப்பதாக தெல்லிப்பளை புற்றுநோய் பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது இருக்கிறது என்று கூறுவது முரண்நகையாக உள்ள அதேவேளை தமிழ் சமூகத்தில் இன்று காணப்படும் பாரிய பலவீனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

அதாவது சிங்களத் தலைவர்கள் சிங்கள சமுகத்தில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெற்றுக் கொண்டு சாமர்த்தியமாக செயல்படும் போது தமிழ் தலைவர்கள் சுகாதாரத்துறை சார் நிபுணர்களை கலந்தாலோசிக்கது புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் கஷ்டங்களை அதிகரிக்கும் வகையில் செயல்படுவது முறையாகுமா ?

இந்த நாட்டில் இருதேசங்கள்: சிங்கள தேசம் தமிழ் தேசம் இருக்கிறது என்று கூறிவரும் தமிழ் தலைவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழர் தேசம் ஒன்றை அமைப்பதற்குரிய உண்மையான முயற்சிகளை ஒற்றுமைப்பட்டு இனியாவது முன் எடுக்க வேண்டும்.

அதாவது தமிழ் அரசியல் தலைவர்களுக்கு மதியுரை வழங்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆலோசனை சபை ஒன்றை நாட்டிலும் புலத்திலும் உள்ள புத்திஜீவிகள்இ பேராசிரியர்கள் மற்றும் துறை சார் நிபுணர்களைக் கொண்டு அமைக்க வேண்டும்.2012 ஆம் ஆண்டில் குடித்தொகை கணிப்பீடுகளின் மூலம் தமிழர்கள் விரைவில் (2028 ஆம் ஆண்டளவில்) இலங்கையின் முதலாவது சிறுபான்மை நிலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று நான் எதிர்வு கூறிய காலத்தில் இருந்து தமிழர்களுக்கான ஆலோசனைச்சபையின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன்.

மதிப்புக்குரிய முதுபெரும் தலைவர் சம்பந்தரின் காலத்திலேயே அனைத்து தமிழ் கட்சி தலைவர்களும் இணைந்து ஒரு ஆலோசனை சபையை அமைக்க வேண்டும் அமைக்கத் தவறினால் ஈழத்தில் தமிழினத்தை சூழவுள்ள பேராபத்தில் இருந்து தப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும்.

எனவே மறுபடியும் தமிழ் தலைவர்களை எதிர்வரும் 5 வருடங்கள் தொடரவுள்ள ஆட்சியின் கீழ் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தமிழ் நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களையும் சிரமங்களையும் தவிர்க்கும் வகையில் தெல்லிபபளை புற்றுநோய் பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியை எதிர்க்கவேண்டாம் என்று விநயமாக கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் மதிப்புக்குரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் கட்சித் தலைவர்களையும் ஒற்றுமையாக தமிழர் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பவதற்காகவும் சுகாதாரத்துறை உட்பட தமிழர்களை பாதிக்கும் அனைத்து துறைகளிலும் மதியுரை வழங்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆலோசனை சபை ஒன்றை அமைக்க முன்வருமாறு மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

வைத்தியர் முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்