தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 201 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதன்போது 31 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 2,193 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 338 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு உத்தரவுகளை பின்பற்றத் தவறியமைக்காக கடந்த நான்கு நாட்களில் 75 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் பகுதிகளிலும் குலியாபிட்டி, எஹெலியகோடா மற்றும் குருணாகல் நகராட்சி மன்ற பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது.

ஊரடங்கு உத்தரவு உள்ள அல்லது நடைமுறையில் இல்லாத பகுதிகளில் வசிப்பவராக இருந்தபோதிலும், அனைவரும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.