(க.பிரசன்னா)

இலங்கையில் வளி மாசடைவு எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 

வளி மாசடைவு முற்றாக நீங்கியுள்ளதாக அறிவிப்பு : நுரையீரல் தொற்று நோய்களும்  ஏற்படுவதாக எச்சரிக்கை! | Virakesari.lk

இலங்கையின் தெற்கு பகுதிகளை தவிர, கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் சில இடங்களில் வளிமண்டலத்திலுள்ள துகள்களின் அளவு கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் அசாதரணமாக அதிகரித்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட அளவைப் பொறுத்து வளிமண்டலத்தில் உள்ள துகள்களின் அளவு கடந்த சில நாட்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

அமெரிக்க வளிதரக் குறியீட்டின்படி, பி.எம்.2.5 எனும் மிகச் சிறிய துகளின் பெறுமதியானது, 100 இலிருந்து 150 வரை அதிகரித்துள்ளது. இது மிக முக்கியமான குழுக்களில் ஆழமான விளைவை ஏற்படுத்துமென தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் 19 தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வீதிகளில் போக்குவரத்து செயற்பாடுகள் குறைவாக காணப்பட்டமையால் கடந்த சில நாட்களில் நகர்புறங்களின் வளிமாசு ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டன.

ஆனால் இந்த திடீர் வளிதரத்தின் மாற்றமானது தீவைச் சுற்றியுள்ள வளி சுற்றில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வளிமாசு அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சுவாச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்;கு சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசங்களை தவறாமல் அணிதல், உடற்பயிற்சிகள், விளையாட்டு, வெளிபுற சூழலில் வேலை செய்வது போன்ற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்வதன் மூலம் உடல் நல பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சுவாச பிரச்சினைக் கொண்டவர்கள் மருத்துவ சிகிச்சையினை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.