(நா.தனுஜா)

ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியிருக்கிறது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதைத் தடுப்பதற்கான தினத்தை (நவம்பர் 2 ஆம் திகதி) முன்னிட்டு சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது எந்தவொரு நாட்டு அரசாங்கத்தினதும் பொறுப்பு என்றாலும்கூட, இந்நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல் எவற்றுக்குமே நீதி வழங்கப்படவில்லை. 

அவ்வாறானதொரு நாட்டில் வாழவேண்டியுள்ளமை குறித்து நாம் விசனமடைகின்றோம்.

நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதாகக்கூறி கடந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறியது. 

அதற்கேற்ப சில சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட, அவை மிகவும் மந்தகரமான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

நாட்டின் வரலாற்றில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இரு சம்பவங்கள் தொடர்பாக மாத்திரமே மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அவற்றில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கின் சாட்சியாளர்கள் நீதிமன்ற உத்தரவையும் மீறி, தற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் முன்னிலையாகி, தம்மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே நீதிமன்றத்தில் சாட்சியமளித்ததாகக் கூறினர். 

இது நிச்சயமாக வழக்கு விசாரணை நடவடிக்கைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அண்மையில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதன்படி ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகையில் அவை சுயாதீனமானவையாக அமையுமா? என்ற சந்தேகம் காணப்படுகின்றது. 

ஏனெனில், 20 ஆவது திருத்தத்தின்படி உயர்நீதிமன்றம் உள்ளடங்கலாக அனைத்து நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. 

இந்நிலையில், கடந்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.