ஆர். கலைச்செல்வன்

 

கொரோனா தொற்று பரவலையடுத்து கடந்த சில நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட ஹட்டன் நகரம் நேற்று முன்தினம்  முதல் வழமைக்கு திரும்பியது.

அந்தவகையில் ஹட்டன் நகரம் முழுவதும் தற்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

கடைகள் மற்றும் அலுவலகங்கள் பொது இடங்கள் என்பவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 24.10.2020 அன்று ஹட்டன் நகரில் கொரோனா தொற்று நோயாளி அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அதிகளவில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் , அப்பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் சிறு வியாபார நிலையங்கள் என்பனவற்றை மீள திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

எனினும் சில வர்த்தக நிலையங்கள் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டு காண்ப்படுகின்றதை அவதானிக்கமுடிகின்றது. 

ஹட்டனில் கொரோனா நிலைமை

ஹட்டன் பகுதியில் நேற்றைய தினம் தனியார் வங்கி ஒன்றின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர் கொழும்பை வசிப்பிடமாக கொண்டவரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்தோடு அவரின் உறவினர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து , அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தனியார் வங்கியின் ஹட்டன் கிளை மூடப்பட்டுள்ளதுடன் , அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம்!

 ஹட்டன் நகரில் பொது மக்கள் அன்றாட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள போதிலும் , குறைந்தளவான மக்கள் நடமாட்டத்தை காண கூடியதாக இருக்கின்றது.

பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதோடு , அச்சத்தோடும் அவர்களின் தொழில்களை ஆரம்பிக்கின்ற நிலமையை காண முடிகின்றது.

அந்தவகையில் ஹட்டன் வலயத்திற்குட்டபட்ட சில பொலிஸ் பிரிவுகளில் உள்ள சில கிராமங்களின் சில லயன் பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் இடமாக காணப்படுகின்றது.

அவ்வாறு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புகளை பேணியிருக்காலாம் எனும் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பஸ் நிலையம்!

ஹட்டன் பஸ் நிலையத்தில் தொற்று நீக்க செயற்பாடுகள் இடம்பெறுவதோடு, பஸ்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது.

எனினும் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து காணப்படுகின்றதாக பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவை!

பொகவந்தலாவை நகரில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையமாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பொலிஸாரின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட கிருமி நாசினி தெளிப்புடன் நகரம் சுத்தம் செய்யப்பட்டதை அடுத்து நகரம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

தற்போது அங்கு அதிகளவிலான பொதுமக்கள் நடமாட்டத்தை காண முடியகின்றது.

இவ்வாறான தொற்று நீக்க செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் மலையகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கண்டுப்படுத்த கூடியதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.