நாட்டில் அனைத்து நடவடிக்கைகளும் ஒருவகையில் செயலிழந்து போய் இருப்பதன் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் ஆளாகி உள்ளனர்.

எப்போது நமக்கும் இந்த கொரோனா தொற்றுநோய் பீடித்து விடுமோ? என்ற அச்சம் பலரையும் ஆட்கொண்டுள்ளது.

இந்த முகக்கவசத்திலிருந்தும் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ, முன்னரைப் போன்றுதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட, வழி பிறக்காதா? என்ற ஏக்கம் அனைவர் மனங்களிலும் குடிகொண்டுள்ளது.

இந்த முகக்கவசத்தில் இருந்தும் நாம் விடுதலை பெற வேண்டுமானால் முதலில் கொரோனா வைரஸ் இடமிருந்து  நாம் தப்புவதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேவேளை, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் சீனா என இதற்கு எந்த நாடும் மருந்து கண்டு பிடித்தாலும், முதலில் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அதனை வழங்கிவிட்டே இதர நாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்வார்கள்.

அவ்வாறு அது உலகத்தைச் சுற்றி நமது நாட்டுக்குள் வந்து சேர பல மாதங்களோ, இல்லை  வருடங்களோ கூட ஆகலாம் . 

அதுவரை நாம் என்ன செய்வது? என்பது அடுத்து எழுந்துள்ள கேள்வி. இதற்கு ஒரே வழி சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றிக்கொண்டு  கொரோனாவுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என்பதேயாகும் .

அதில் உண்மை இல்லாமலும் இல்லை. 

ஆனால் அனைவரும் ஒட்டுமொத்தமாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பார்களா? என்று கேட்டால் அதற்கு பதில்  எவராலும் கூற முடியாது என்பதே உண்மை. 

இதனிடையே கொரோனா நோய்த்தொற்றாளர்களைக்  கண்டால் அவர்களை தீண்டத்தகாதவர்களைப் போன்று  ஓடி ஒளிந்துக் கொள்வது தான் அவர்களை மேலும் மனோரீதியாக பெரிதும் நிலைகுலையச் செய்துள்ளது. 

அண்மையில் தனது தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மகன் தற்கொலை செய்து கொண்டார்.

எவரும் மனோரீதியாக பலவீனம் அடைந்தால், அவர்கள் நோய்த் தொற்று ஏற்படாமலேயே நோயாளியாகும் நிலைமை உருவாகும்.  

எனவே, அது தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளக்கூடாது. ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் ஆலோசனை.

அந்த வகையில் இந்த கொடிய கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் வைத்தியர்கள் மருத்துவ ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்வோர் என பல்வேறு தரப்பட்டவர்களும் பாதுகாப்புடன் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்  .

"நிலவுக்கு பயந்து பரதேசம் போக முடியுமா" என்பார்கள் அதே போன்று  மனதிலுள்ள அச்சத்தைப் போக்கி  நாம் வழமை போன்று நடந்துகொள்ள முன்வர வேண்டும்.  

அதன் மூலமே மன அழுத்தங்களில் இருந்தும்  விடுதலை பெறக்கூடியதாக இருக்கும்.

அண்மையில் பொலநறுவையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாம் ஒன்றில் இருப்பவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அதைப் பலரும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

எனவே அநாவசியமான கவலைகள், சிந்தனைகள் அனைத்தையும் கைவிட்டு இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும். 

மாறாக துயரங்களை மாத்திரமே நினைத்து சதா கண்ணீர் வடிப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை சற்று நிதானமாக ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க முன்வருவது அவசியம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்.