ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகளினால் வீழ்த்தி, டெல்லி அணி பிளே-ஒப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. 

இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் அபுதாபியில் நேற்றிரவு நடைபெற்ற 55 ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தல‍ைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூ அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பெங்களூருக்கு வழங்கியது.

அதன்படி ஜோஷ் பிலிப்பும், தேவ்தத் படிக்கல்லும் பெங்களூரு அணியின் ஆரம்ப வீரர்களாக களம் புகுந்தனர். 

பிலிப் 12 ஓட்டங்களில் ரபடாவின் பந்து வீச்சில் வீழ்ந்தார். 2 ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களமிறங்கி துடுப்பெடுத்தாட, சீரான வேகத்தில் ஓட்ட எண்ணிக்கை நகர்ந்தது. 

எனினும் விராட் கோலி அஸ்வினின் சுழலில் சிக்கி 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அஸ்வின் பந்தில் கோலி ஆட்டம் இழந்தது இதுவே முதல் முறையாகும்.

இதன் பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸுடன் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடிய படிக்கல் தொடரில் 5 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

 எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 112 ஓட்டங்களை எட்டியபோது அவரும் அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கிறிஸ் மோரிசும் அதே ஓவரில் எதுவித ஓட்டமின்றி விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஷிவம் துபே 17 ஓட்டங்களையும் டிவில்லியர்ஸ் 35 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை குவித்தது.

டெல்லி சார்பில் பந்து வீச்சில் நோர்டியா 3 விக்கெட்டுகளையும், ரபடா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

153 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை இலக்கை நோக்கி டெல்லி விளையாடியது. 

தொடக்க வீரர் பிரித்வி ஷா 9 ஓட்டத்துடன் விரைவில் ஆட்டமிழந்தார். எனினும் ஷிகர் தவானும், ரஹானேவும் கூட்டணி அமைத்து வேகமாக அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்தனர்.

அதனால் டெல்லி அணி 12.1 ஓவர்களில் 100 ஓட்டங்களை பெற்றது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி விரைவாக வெற்றி இலக்கை எட்டிவிடும் என்றுத் தோன்றியது.

எனினும் 12.4 ஆவது ஓவரில் தாவன் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அணியின் ஓட்ட வேகம் குறைந்தது.

தவானுக்கு அடுத்து வந்த ஸ்ரேயஸ் அய்யர் 7 ஓட்டங்களுடனும், ரஹானே 60 ஓட்டங்களுடனும், ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனால் டெல்லி அணி 17.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும் இதன் பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக ரிஷாத் பந்த், மார்கஸ் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தாட 19 ஓவர்களில் டெல்லி அணி பெங்களூரு நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

8 ஆவது வெற்றியை ருசித்த டெல்லி அணி அடுத்த பிளே-ஒப் சுற்றுக்கு அடியெடுத்து வைத்ததுடன் புள்ளி பட்டியலில் 2 ஆவது இடத்தையும் பிடித்தது. 

நாளை மறுதினம் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை அணியை டெல்லி மோதும்.

டெல்லியிடம் பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணியும் பிளே-ஒப் வாய்ப்பை வசப்படுத்தி விட்டது. 

அதாவது 17.3 ஓவருக்குள் டெல்லி அணி இலக்கை எட்டியிருந்தால் ரன்ரேட்டில் பெங்களூரு அணி, கொல்கத்தாவுக்கு கீழ் சென்றிருக்கும். ஆனால் டெல்லி அணி 19 ஆவது ஓவரில் வெற்றியை பெற்றமையினால் பெங்களூரு அணி (14 புள்ளி), ரன்ரேட்டில் கொல்கத்தாவை விட (14 புள்ளி) முந்தியே உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி, மும்பையிடம் தோற்றால் கொல்கத்தாவுக்கு ‘பிளே-ஒப்’ அதிர்ஷ்டம் கிடைக்கும். ஐதராபாத் வெற்றி கண்டால் 4 ஆவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.