(செ.தேன்மொழி)


தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.இதன் போது உரிய பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து 15 தடவைகள் இந்த விநியோக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் அதற்கான அனுமதிப்பத்திரங்களை பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டடார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

மேல்மாகாணத்தில் 112 பொலிஸ் பிரிவுகளுக்கும் , குளியாப்பிட்டியில் 5 பொலிஸ் பிரிவுகளுக்கும் , இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்கும் மற்றும் குருணாகலை பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை வாரத்தில் இருநாட்கள் திறந்து வைப்பதற்கு , தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதிலும் வைரஸ் பரவும் அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு அந்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவசியமான பொருட்களை அவர்களது வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த பகுதியில் உள்ள சொகுசு வர்த்தக நிலையம், கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் மற்றும் சத்தோச விற்பனை நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்திலிருந்து 15 தடவைகள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

அதேபோல் குறிப்பிட்ட ஒரு உணவகத்திலிருந்து 10 தடவைகள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடமுடியும். இதேவேளை இணையத்தின்ஊடாக மருந்தகங்களின் சேவையைப்பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விநியோக நடவடிக்கைகளுக்கான அனுமதிபத்திரத்தை பிரதேச செயலகங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள கூடியதாகவிருக்கும் .அதற்கமைய குறித்த நிறுவனங்களிலிருந்து உரிமையாளர்கள்,நிறுவனம் அமைந்துள்ள பிரதேச செயலகங்களுக்கு சென்று தமது அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதன் போது பிரதேச செயலகத்தில்
பொலிஸ் அதிகாரி ஒருவரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்.

இதேவேளை , இந்த விநியோக நடவடிக்கைளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள , ஊழியர்களுக்கு உரிய சுகாதார வழிமுறைகைகளை கடைப்பிடிக்குமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தல்களை வழங்கயிருக்க வேண்டும். இதன் போது கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைளில் ஈடுபடும் வாடிக்கையாளர்களும் உரிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமானதாகும். அதற்கமைய முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை பேணல் , கையுறை அணிந்திருத்தல் ஆகிய சுகாதமார வழிமுறையை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் மக்கள்ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

அத்துடன், அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த 102 நிறுவனங்களின் ஊழியர்கள் தமது தொழில் அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும். இந்த அனுமதியை முறைகேடாக பயன்படுத்துவதை அவர்கள் தவிர்த்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும் என்றார்.