(எம்.மனோசித்ரா)

பாணந்துறை பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

27 வயதுடைய குறித்த இளைஞன் கடந்த 31 ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இவரது மரணம் இலங்கையில் பதிவான 22 ஆவது கொரோனா மரணம் என அறிவிக்கப்பட்ட போதிலும்,  பின்னர் அதனை கொரோனா மரணமாாகக் கருத முடியாது என தொற்று நோயிியல் பிரிவு அறிவித்தது.  


இந்நிலையில் சுமார் 5000 தொடக்கம் 6000 வரையான தொழிலாளர்கள் தொழில்புரிகின்ற ஹொரனை ஆடை தொழிற்சாலை ஊடாக மினுவாங்கொடை கொத்தணியை ஒத்த கொத்தணிகள் உருவாகினால் அது பாரதூரமானதாகும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

எனவே மீண்டும் கிளை கொத்தணிகள் உருவாக வாய்ப்பளிக்காமல் உரிய நடவடிக்கைகளை துரிதமான முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணி வரை 275 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

இவர்களில் 43 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்றும் ஏனைய 232 பேரும் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை பொது சுகாதார பரிசோதகர்கள் மூவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதோடு , 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய ஊழியரும் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மினுவாங்கொடை கொத்தணியைப் போன்று ஹொரனையிலும் இவ்வாறானதொரு கொத்தணி ஏற்பட்டால் அது மிகவும் பாரதூரமான நிலைமையாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஹொரனை ஆடை தொழிற்சாலையைப் போன்று மேலும் சில தொழிற்சாலைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில ஆடை தொழிற்சாலைகளில் 5000 தொடக்கம் 6000 ஊழியர்கள் தொழில் புரிகின்றனர். மினுவாங்கொடை கொத்தணியைப் போன்று ஹொரனையிலும் இவ்வாறானதொரு கொத்தணி ஏற்பட்டால் அது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.

கிளை கொத்தணிகள் உருவாகுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டாம். ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். போக்குவரத்து கட்டாயம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.

முதியவர்களையும் எச்சரிக்கை மிக்க நிலையில் உள்ளவர்களையும் பாதுகாத்து ஏனையோரும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.


பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் வைரஸ் தொற்று

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் இரு பொது சுகாதார பரிசோதகர்கள் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் இணைந்து பணியில் ஈடுபட்ட மேலும் 8 பேர் அநுராதபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் றோஹன தெரிவித்தார்.


அத்தோடு கொழும்பு மாவட்டத்தில் சேவையாற்றிய மேலுமொரு பொது சுகாதார பரிசோதகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய இதுவரையில் 3 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதோடு 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உபுல் றோஹன தெரிவித்தார்.


ஹொரனை ஆடை தொழிற்சாலையில் பலருக்கும் தொற்று

ஞாயிற்றுக்கிழமை ஹொரனை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் எழுமாற்றாக மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது பலருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் றோஹன உறுதிப்படுத்தினார்.

சுமார் 550 ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 34 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆடை தொழிற்சாலை அறிக்கையொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.


இந்திய உயர்ஸ்தானிகராலய ஊழியர்

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் துணை ஊழியர் ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் நேற்று ஊடக அறிக்கையை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.


போக்குவரத்தில் சிக்கல்
வைத்தியசாலையில் சிகிச்சை படுக்கைகளில் பற்றாக்குறை இல்லாத போதிலும் போக்குவரத்து பிரச்சினை காணப்படுகிறது. எனவே இவ்வாறு போக்குவரத்து பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தொடர்புகொள்ள வேண்டிய அதிகாரிகள் குறித்து இராணுவத்தளபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்களம்

கொவிட்-19 அச்சுறுத்தலின் காரணமாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்களை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சீ.சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவித்தல் விடுக்கப்படுவதற்கு முன்னர் வசதிகள் ஒதுக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையினருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கும் வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு தீயணைப்பு பிரிவினருக்கு தொற்று

கொழும்பு தீயணைப்பு பிரிவு திணைக்களத்தின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக 2 நிலையங்களை ஸ்தாபித்து தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக கொழும்பு தீயணைப்பு பிரிவின் தலைவர் பி.டி.கே.ஏ. வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
தீயணைப்பு பிரிவு திணைக்களத்திலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் பிரிவின் வைத்திய நிபுணர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.


திருகோணமலையில் வைத்தியருக்கு தொற்றுறுதி

திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறைக்கு சென்று வைத்தியசாலைக்கு திரும்பிய வைத்தியருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.  
குறித்த வைத்தியருடன் தங்கியிருந்த மற்றுமொரு வைத்தியருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு , வைத்தியர் சில நோயாளர் விடுதிகளுக்கு சென்றுள்ளதால் அங்குள்ள ஊழியர்களுக்கும் நோயாளர்களுக்கும் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முதியோர் இல்ல ஊழியருக்கு கொரோனா

மீரிகம – தவலம்பிட்டி பிரதேசத்திலுள்ள முதியோர் இல்ல ஊழியர் ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.
குறித்த ஊழியர் முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்களிடம் நெருங்கிய தொடர்புகளைப் பேணவில்லை என்பதால் அவர்களுக்கு தொற்று ஏற்படக் கூடிய அபாயம் இல்லை. எனினும் அவருடன் சேவையாற்றிய மேலும் நால்வர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.


கேகாலையில் ஊரடங்கை அமுல்படுத்த கோரிக்கை

கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல மற்றும் புளத்கோபிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.


கேகாலை மாவட்டத்தில் இது வரையில் 107 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மாவனெல்ல பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதே போன்று புளத்கோபிட்டி, கேகாலை, தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


மாவனெல்ல மற்றும் புளத்கோபிட்டி பிரதேச செயலாளர்களால் குறித்த பகுதிகளில் எச்சரிக்கை காணப்படுவதால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் ஆளுனரிடமும் அறிவித்திருக்கின்றோம். எனவே உயர்மட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அத்தோடு கம்பஹா மாவட்டத்திலிருந்து கேகாலைக்கு வருபவர்களை கட்டுப்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் உள்ள பகுதிகளில் வாராந்த சந்தைகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.