சமூக இடைவெளி பேணல் மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகிய அறிவுறுத்தல்களைப் பின்பற்ற தவறிய 70 பேர் கடந்த மூன்று நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில்  சமூக இடைவெளி பேணாதோர் மற்றும் முகக்கவசங்கள் அணியாதோரை கைது செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் பிரகாரம் தனிநபர்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்களிற்கு எதிராக 10,000 ரூபாவிற்கு மேற்படாத அபராதம் விதிக்கப்படலாம். அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.