“அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியொவின் பிரதான இலக்கு,சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நெருங்கிய உறவுகளை உடைத்து இரு தரப்புக்களையும் பிரிப்பது தான்”

 “சீனா கடன்பொறியில் இலங்கையை தள்ளவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் நிராகரித்திருப்பது, சீனாவுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய விடயம்”

 

-ஹரிகரன்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை தோற்றுவித்திருக்கிறது.

சீனாவுடன் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவும்,  சீனாவுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த இலங்கையும் – சந்தித்துக் கொள்வதால்,  பொம்பியோவின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

Image

இந்தப் பயணத்தின் போது,  இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான சூழலில் கேள்விக்குள்ளாகியுள்ள ஜனநாயகம்,  பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் போன்ற விடயங்களில் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று தமிழ்த் தரப்பில் சிலர் எதிர்பார்த்திருந்தனர்.

சீனாவின் பக்கம் சாயும் கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கத்திற்கு கடிவாளம் போடும் வகையில், அவர் கண்டிப்புடனும் நடந்து கொள்வார் என்றும் வேறு சிலர் எதிர்பார்த்தனர்.

ஆனால், இந்த இரண்டு தரப்புகளினதும் எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்யும் வகையிலேயே அமைந்திருக்கிறது பொம்பியோ இந்த பயணம்.

Image

இந்த பயணத்தில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்ட ஒரே விடயம் சீனா தான்.

சீனாவுடன் நெருங்கிய உறவுகளை பேணி வரும் இலங்கையை,  சீனாவுக்கு எதிரான தமது கூட்டுக்குள்  கொண்டு வருவதற்கான அதிகபட்ச முயற்சிகளை முன்னெடுப்பதே பொம்பியோவின் இலக்காக இருந்தது.

அதற்காக,  சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளைப் போல அவர், ஒன்றும் உதவிப் பொதிகளையோ, கடன் திட்டங்களையோ கொழும்புக்கு கொண்டு வரவில்லை.

எம்.சி.சி நிறுவனத்தின் கொடையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதோ, சோபா உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதோ அவரது முக்கியமான இலக்காக இருக்கவுமில்லை.

பேராசிரியர்.திஸ்ஸ விதாரண எப்போதும் கனவு காண்பது போல, இலங்கையில் தளம் அமைப்பதற்கான பேச்சுக்களை நடத்துவது கூட, பொம்பியோவின் நோக்கம் அல்ல.

பொம்பியொவின் பிரதான இலக்கு, சீனாவையும் இலங்கையையும் பிரிப்பது தான். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நெருங்கிய உறவுகளை உடைப்பது தான்.

Image

பொம்பியோவின் வருகைக்கு முன்னரே, இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி முதன்மை செயலாளர் டீன் தோம்சன்,  சீனாவா -அமெரிக்காவா என்பதைத்  தெரிவு செய்யுமாறு இலங்கைத் தலைவர்களிடம் பொம்பியோ கோருவார் என்று  ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்து,  இலங்கை அரசாங்கம் ஒரு தெளிவான முடிவை எடுத்து தயார்படுத்திக் கெள்வதற்கான அவகாசத்தைக் கொடுத்திருந்தது.

அதனால் தான், ஜனாதிபதியும், பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் மிகவும் பணிவுடன், சீனாவிடம் இருந்து ஒதுங்குமாறு  அமெரிக்கா விடுக்கும் கோரிக்கையை நிராகரிப்பார்கள் என்று இந்திய ஊடகத்திடம் வெளியுறவு அமைச்சின் முக்கிய அதிகாரி ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்னரே கூறியிருந்தார்.

ஜனாதிபதியுடனும், வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடனும், பேண்தகு அபிவிருத்தி, பொருளாதார ஒத்துழைப்பு, சுதந்திரமான கடல் போக்குவரத்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு என்று,  பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருக்கிறார் அமெரிக்க இராஜாங்கச் செயலர்.

இந்தச் சந்திப்புகளின் போதும், வெளிவிவகார அமைச்சில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலும்,  இலங்கை விவகாரத்தில் சீனா ஏனையவர்களை வேட்டையாடித்  தின்னும் விலங்கு போல,  அல்லது சூறையாடுபவன் போல நடந்து கொள்கிறது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார் பொம்பியோ.

Image

கடலையும், தரையையும் சூறையாடும் உடன்பாடுகளை செய்திருப்பதாகவும், கடன்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவில்லை என்றும்,   அவர் குற்றம்சாட்டினார்.

நட்புறவு கொண்ட நண்பனைப் போல நடந்து கொள்ளவில்லை என்றும், அவர் கூறினார்.

அமெரிக்காவும் அமெரிக்க நிறுவனங்களும் அவ்வாறு வரவில்லை. நண்பனாகவும், சகாவாகவும் தான் வருகின்றன என்றும் கூறியிருந்தார் பொம்பியோ.

இதன் மூலம் அவர் இலங்கையை சீனாவின் பக்கத்தில் இருந்து விலகி, அமெரிக்காவின் பக்கம் திரும்ப வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தார்.

மூளைச் சலவை செய்யும் பாணியில் தான், பொம்பியோ கொழும்பில் நடந்து கொண்டிருந்தார்.

Image

அமெரிக்க - இலங்கை உறவுகளுக்கு தடையாக இருந்த பொறுப்புக்கூறல், எம்.சி.சி உடன்பாடு போன்ற விடயங்களை பெரும்பாலும்,  ஒதுக்கி வைத்து விட்டு,  சீனாவின் பக்கத்தில் இருந்து திரும்பி விடுமாறு பொம்பியோ வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவும் சரி, வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் சரி தமது நிலைப்பாட்டில் இருந்து விலகிக் கொள்ளவில்லை.

நடுநிலை-  அணிசேராக் கொள்கை என்ற வட்டத்தை விட்டு வெளியே வரத் தாங்கள் தயாரில்லை என்று உறுதியாக கூறி விட்டனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில், நடுநிலை அல்லது அணிசேரா கொள்கை என்பது உண்மையான ஒன்று அல்ல. அது சீனாவின் பக்கம் சாய்ந்தது தான்.

சீனாவை சூறையாடும் நாடு என்று பொம்பியோ செய்தியாளர் சந்திப்பில் கூறிவிட்டுப் போன பின்னர்,  தான், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியது.

போர் முடிந்த பின்னர் சீனாவே பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது என்றும், அது இலங்கையை கடன்பொறியில் தள்ளவில்லை என்றும் பொம்பியோவிடம் ஜனாதிபதி எடுத்துக் கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இது,  சீனாவை சூறையாடும் நாடு என்று பொம்பியோ அடையாளப்படுத்தியதை - நிராகரிக்கும் வகையில் கூறப்பட்ட ஒரு கூற்று தான்.

சீனாவின் கடன்பொறியில் இலங்கை சிக்கி விட்டதாக மேற்குலக ஊடகங்களும், அரசாங்கங்களும் தொடர்ச்சியாக கூறிவருவது, சீனாவுக்கு சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அதனை அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் நிராகரித்திருப்பது, சீனாவுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு விடயம்.

Image

சீனாவிடம் இருந்து விலகி கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்க முயன்ற பொம்பியோவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

நடுநிலை கொள்கையிலேயே இருப்போம் என்ற ஜனாதிபதியினதும், வெளியுறவு அமைச்சரினதும் கூற்றானது, அமெரிக்கா தலைமையிலான அணிக்குள் நுழைவதற்கு இலங்கை தயாரில்லை என்ற செய்தியைத் தான் வெளிப்படுத்தியிருருக்கிறது.

இது சீனாவுக்கு ஆறுதலைக் கொடுக்கக்கூடிய ஒரு செய்தி என்பதில் சந்தேகமில்லை.

இந்தோ- பசுபிக் பிராந்தியததில் சீனாவுக்கு எதிரான ஒரு பலமான கூட்டை உருவாக்குவதே அமெரிக்காவின் இலக்கு.

அதில் மாலைதீவு,  இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை இணைத்துக் கொள்வது தான், பொம்பியோவின் திட்டம்.

இந்தியாவிலும் மாலைதீவிலும் அதற்கு எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை. இந்த இரு நாடுகளும் ஏற்கனவே அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து விட்டன.

இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு மாலைதீவுக்குச் சென்ற பொம்பியோ, அங்கு அமெரிக்கா புதிய தூதரகத்தை அமைக்கும் என்று கூறியிருக்கிறார்.

Image

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் தான், இதுவரை மாலைதீவு விவகாரங்களையும் கவனித்து வருகிறார்.

மாலைதீவுடன் அண்மையில் பாதுகாப்பு உடன்பாட்டிலும் கைச்சாத்திட்டிருக்கிறது அமெரிக்கா.

அங்கு சீனாவின் தலையீட்டைத் தடுக்க புதிய தூதரகத்தை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதா - அல்லது சீனாவுடன் நெருங்கியுள்ள இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வேலைப் பளுவை குறைப்பதற்காக, மாலைதீவில் புதிய தூதரகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

எந்தச் சூழ்நிலையிலும் எந்தவொரு நாட்டுடனான உடன்பாடுகளுக்காகவும், நாட்டின் இறைமை, சுதந்திரம், ஆள்புல ஒருமைப்பாடு என்பனவற்றை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று பொம்பியோவிடம் ஜனாதிபதி கூறியதாக ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இறைமை, சுதந்திரம், ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் குறித்து பேசப்பட்டிருப்பதால் தான், இவ்வாறான கருத்தை ஜனாதிபதி வெளியிட்டிருக்கிறார்.

Image

ஆனால் அது என்ன என்பது வெளிச்சத்துக்கு வரவில்லை.

எவ்வாறாயினும், இலங்கையின் இறைமை, சுதந்திரம் ஆகியவற்றை மதிப்பதாக அமெரிக்க திரும்பத் திரும்பக் கூறிக் கொள்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொம்பியோவின் இந்தப் பயணம் அமெரிக்காவுக்கு எந்த மூலோபாய நலன்களையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக அமையவில்லை.

ஆனால், கொழும்பில் இருந்து பொம்பியோ சீனாவை விமர்சித்து வெளியிட்ட கருத்துக்கள், சர்வதேச அளவில் கவனயீர்ப்பை பெற்றிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.