“எமது அரசியலமைப்பில் எங்கேயும் தலையீடு செய்ய வேண்டாம் . அது பராமரிக்கப்படல் வேண்டும், ஏனென்றால் அது மட்டுமே எமது சுதந்திரத்தின் ஒரே பாதுகாப்பாகும் ” – ஆபிரகாம் லிங்கன்
கொரோனா தொற்று ஆபத்துக்கும் முகங்கொடுத்து 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது அரசாங்கம். இந்த திருத்தச்சட்டம் தற்காலிகமானது என்றும் புதிய அரசியலமைப்பு ஒன்றை நோக்கி செல்வதே தமது நோக்கம் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பின் வரைபுக்கு நிபுணர் குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பு வரைபை ஒரு வருடத்துக்குள் தயார்ப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதே வேளை புதிய அரசியலமைப்பில் உள்ளடங்க வேண்டிய அம்சங்களை பொது மக்களும் பரிந்துரை செய்யலாம் என பத்திரிகைகளில் விளம்பரங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் , மற்றும் புத்தி ஜீவிகளை கொண்ட குழுக்கள், சிவில் அமைப்புக்கள் , தத்தமது சமூகம் சார்பாக புதிய அரசியல் வரைபில் முன் வைக்கக் கூடிய பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் சேகரிக்க ஆரம்பித்துள்ளன. இவை நிபுணர் குழுவின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டாலும் அவை எந்தளவுக்கு புதிய அரசியல் வரைபில் உள்ளடக்கப்படப் போகின்றன என்பது கேள்விக்குறியே.
ஏனென்றால் இந்த நாட்டுக்கு தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறான அரசியல் அமைப்பு பொருத்தமானது என்பதை ஜனாதிபதி அவர் சார்ந்த வியத்மக அமைப்பினரும் முன்மொழிவுகளை எப்போதோ முன்வைத்திருப்பர். ஆகவே அதன்படியே அனைத்தும் நடக்கும்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பு எமது நாட்டுக்கு அமுல்படுத்தப்படும் போது இங்கு வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் விருப்பு வெறுப்புகள் எந்தளவுக்கு கருத்திற் கொள்ளப்படும் என்பது எவருக்குமே தெரியாது. மிக முக்கியமாக சுதந்திரம் கிடைத்த ஆண்டிலிருந்து இப்போது வரை அனைத்து அரசாங்கங்களினாலும் அனைத்து வித புறக்கணிப்புகளுக்கும் முகங்கொடுத்து வரும் மலையக சமூகத்தின் அரசியல் இருப்பு, பிரதிநிதித்துவங்கள், தேசிய அரசியலில் அவர்களின் பங்களிப்பு போன்ற விடயங்கள் புதிய அரசியல் வரைபில் உள்ளடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பானது அதன் பொருத்தமற்ற தன்மை காரணமாகவே 19 தடவைகள் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது ஆகவே எமக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை என்ற ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்சவின் கூற்று சீர் தூக்கி பார்க்க வேண்டியதொன்று. நாட்டின் பெரும்பான்மை மக்களாக விளங்கும் சிங்கள மக்களுக்கே இது பொருத்தமற்றதாக இவ்வளவு காலங்கள் இருந்திருக்குமானால் இதன் மூலம் சிறுபான்மையினர் என்ன தான் வரப்பிரசாதங்களைப் கடந்த காலத்தில் பெற்றிருக்க முடியும் ? என்ற கேள்வி எழுவது நியாயமே.
உலக பொலிஸ்காரன் என வர்ணிக்கப்படும் ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்துக்கு 233 வயதாகின்றது. இத்தனை வருடங்களில் அது 27 முறையே திருத்தங்களுக்குட்பட்டுள்ளது. இறுதியாக 1992 ஆம் ஆண்டு அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் சட்டவாக்க வலிமையும் ஜனநாயகத்தன்மை காரணமாகவுமே அதை பராமரிக்க வேண்டுமே ஒழிய தலையீடுகளை செய்யக் கூடாது என ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் என்றும் பேசப்படும் ஜனாதிபதியாக விளங்கக் கூடிய ஆபிரகாம் லிங்கன் அப்போதே கூறி வைத்தார்.
அந்த நாட்டின் குடிமக்கள், ஆட்சி முறை போன்றவற்றை மூன்றாம் உலக நாடாக விளங்கும் இலங்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தமாகாது என்று சிலர் கூறலாம். ஆனால் வரலாறும் படிப்பினைகளுமே சிறந்த ஒரு அரசியலலமைப்பை உருவாக்குவதில் முன்னிற்கின்றன.
எல்லா அரசியலமைப்புகளும் ஏதோ ஒரு சுயநலத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன என்ற கூற்றும் உண்டு. ஆனால் மிகவும் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இலங்கை போன்றதொரு நாட்டின் அரசியலமைப்பொன்று இத்தனை திருத்தங்களுக்குட்பட்டதும் அதற்கு அடுத்ததாக புதிய அரசியல் அமைப்பொன்றை நோக்கி செல்வதும் சரியான ஆட்சியாளர்கள் இந்த நாட்டுக்கு கிடைக்கவில்லையோ என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பாமலில்லை.
அனைவரையும் திருப்பதிபடுத்தக் கூடிய விதத்தில் அரசியலமைப்பொன்றை உருவாக்குவதென்பது ஆட்சியாளர்களுக்கு முடியாத காரியம். ஆனால் அதில் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் எவ்வகையிலும் மீறப்படாமலிருக்கும் என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது. இல்லாவிடின் உருவாகவிருக்கும் புதிய அரசியலமைப்பும் சட்டமானதன் பின்னர் ஆட்சி மாற்றங்களின் போது பல திருத்தங்களுக்குள்ளாவதை எவராலும் தடுக்க முடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM