கொரோனா வைரஸ் தொற்று வந்த நாள் தொடக்கம் புதிய புதிய ஆய்வுத் தகவல்களும் குறைவின்றி வந்த வண்ணம் உள்ளன.

இதே வகையான தொற்று 100 ஆண்டுகளுக்கு முன்னரும் உலகிற்கு வந்துள்ளது என்று கூறி பல்வேறு புகைப்படங்களுடன் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

அதன் உண்மைத்தன்மை குறித்து சரியாக அறிய முடியாத நிலைமைகளே காணப்படுகின்றன.  இவ்வாறான சூழலில் கொரோனாவின் முதலாவது அலை தொடர்பிலும் அதன் தற்போதைய இரண்டாவது அலை தொடர்பிலும் நாம் நன்கு அறிந்து வைத்துள்ளோம்.

அதாவது தற்போது நாட்டில் பரவியுள்ள வைரஸ் முன்னரை விட வித்தியாசமானது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது கொவிட் -19 வைரஸ்களின் உப பிரிவான  பி .142 வகையைச் சார்ந்த ஒன்றாகும் என்றும் இது வீரியமும் கனமும் மிக்கது எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 மேலும் இது கட்டாயமாக வெளிநாட்டிலிருந்து காவி வரப்பட்ட ஒன்றாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மினுவாங்கொடையில் ஆரம்பித்து திவுலப்பிட்டிய, பேலியகொட, பேருவளை என்று கொத்தணியாக நோய் பரவியுள்ளமை தெரிந்ததே.

 இவற்றுக்கு மத்தியில் அதி முக்கியமான தகவல் ஒன்றை ஐக்கிய நாடுகளின் அறிவியல் குழு கூறியுள்ளது. அதாவது;

கொரோனா போன்ற தொற்றுநோய்கள் அடிக்கடி நிகழும், அதிகமான மக்களைக் கொன்று, உலகப் பொருளாதாரத்திற்கு இன்னும் அதிகமான சேதத்தை உருவாக்கும். இயற்கையை பாதுகாக்கத் தவறினால் இவ்வாறு கண்டிப்பாக நடக்கும். 

கொரோனா வைரசைப் போலவே விலங்குகளில் இன்னும் 850,000 வைரஸ்கள் உள்ளன. அவை மக்களுக்கு பாதிப்பை   ஏற்படுத்தக்கூடியவை. 

1918 இன் இன்ஃப்ளூயன்ஸா பரவியதிலிருந்து, கொரோனா உலகை தாக்கியிருக்கும் ஆறாவது தொற்றுநோயாகும். இவை அனைத்துக்கும் மனித நடவடிக்கைகளே முழுமையான காரணம். 

காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கும் அதே மனித நடவடிக்கைகள் தான், விவசாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்பின் மூலம் தொற்று அபாயத்தையும் உண்டாக்குகின்றன. 

காடுகளின் அழிப்பு, விவசாய விரிவாக்கம், வனவிலங்கு வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் சுரண்டல் ஆகியவை இதில் அடங்கும். இவற்றின் மூலம் மனிதர்கள் காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகளுடன் அதிக அளவில் நெருங்கிய தொடர்பைக் கொள்கிறார்கள். 

இதனால் விலங்குகளில் இருக்கும் நோய்களுடனும் மனிதர்களுடைய தொடர்பு அதிகரிக்கிறது இதனால் கொடிய நோய்கள் உருவாகின்றன என்றும் அந்த குழு எச்சரித்துள்ளது.

அண்மையில் அவுஸ்திரேலியா , அமெரிக்கா மற்றும்

அமேசன் காடுகளில் ஏற்பட்ட சுய தகனம் காரணமாக இலட்சக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிந்தது மாத்திரமன்றி விலங்குகளும் பலியாகின

எனவே இவற்றுக்கு தீர்வு காணாதவரை மனித அழிவுகளையும் தடுத்து நிறுத்த முடியாது.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்