- சுபத்ரா

“பாதுகாப்புச் செயலாளராக இருந்த சந்திரானந்த டி சில்வா வை 1995ஆம் ஆண்டில் கனடாவுக்கான தூதுவராக நியமிக்க பரிந்துரைத்த போது, கனடா அதனை ஏற்க மறுத்தது.முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பலகல்லவையும் கூட, கனடா தூதுவராக ஏற்றுக் கொள்ளவில்லை”

விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளார். அவரை, கனடாவுக்கான தூதுவராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற அட்மிரல் பியால் டி சில்வாவுக்கும், வெளிநாட்டுத் தூதவர் பதவி வழங்கப்பட்டிருகிறது.

அவர் ஆப்கானிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது, விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் எயர் மார்ஷல் சுமங்கல டயசை, கனடாவுக்கான தூதுவராக நியமிப்பதற்காக, அவரது பெயர், உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழுவுக்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்த பின்னர், இந்த நியமனம், கனடிய அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும்.

புதிய தூதுவராக அவரை கனடா ஏற்றுக் கொண்ட பின்னரே, அவரால் பதவியைக் பொறுப்பேற்க முடியும்.

இதுதான் எல்லா நாடுகளுக்குமான தூதுவர்கள் நியமிக்கப்படும் போது, கையாளப்படுகின்ற பொதுவான வழிமுறை.

வெளிநாட்டுத் தூதுவர்களை நியமிக்கும் போது, பெரும்பாலும் இந்த வழிமுறைகளில் தடங்கல்கள் ஏற்படுவதில்லை. விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்கல டயசின் நியமனத்துக்கு, உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு தடைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இல்லை.

எனினும், கனடிய அரசாங்கம் இவரது நியமனத்தை ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இந்தச் சந்தேகம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம், எயர் மார்ஷல் சுமங்கல டயஸ், விமானப்படைத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தான், இந்தப் பதவிக்கு பிரேரிக்கப்பட்டிருக்கிறார்.

1986ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்து கொண்ட இவர், போர் தீவிரம் பெறத் தொடங்கிய காலத்தில் இருந்து, போர் முடிவுக்கு வந்த காலம் வரை- விமானப்படையில் ஒரு பொதுக் கடமை விமானியாகப் பணியாற்றியிருக்கிறார்.

1991ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிலாவத்துறை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.

அப்போது அந்த முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.

முற்றுகையிடப்பட்டிருந்த சிலாவத்துறை முகாமில் உள்ள படையினருக்குத் தேவையான வெடிபொருட்களைத் தரையிறக்கி விட்டு, காயமடைந்த நிலையில் இருந்து படையினரை ஏற்றி வருவதற்காக இரண்டு பெல் -412 ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் ஒன்றின் விமானியாக பணியாற்றியவர் தான் பிளைட் லெப்டினன்ட் சுமங்கல டயஸ். இவர் ஹெலிகொப்டரை தரையிறக்க முயன்ற போது, விடுதலைப் புலிகள் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதன்போது, பிளைட் லெப்டினன்ட் சுமங்கல டயஸ் முகத்தில் காயமடைந்தார். உடனடியாக துணை விமானி ஹெலிகொப்டரை மேலே உயர்த்தி, தள்ளாடி இராணுவ முகாமில் கொண்டு போய் தரையிறக்கினார்.

போர் நடவடிக்கைகளில், முக்கிய பங்கு வகித்த எயர் மார்ஷல் சுமங்கல டயஸ், பின்னர், விமானப்படையின் பல்வேறு அணிகளுக்கு தலைமை தாங்கியவர்.

இறுதிக்கட்டப் போரின் போது, மூத்த விமானப்படை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். தரைப் போரில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் 57 ஆவது, 58 ஆவது, 59 ஆவது பிரிவுகளுடன் இணைந்து செயற்பட்ட இவர், கள நடவடிக்கைகளுக்கு தேவையான, விமான தாக்குதல் உதவிககளை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறான ஒருவரை கனடா தற்போதைய கட்டத்தில் இலங்கைத் தூதுவராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறதா? என்பது தான் கேள்வி.

இந்தக் கேள்வி ஏன் எழுகிறது என்றால், ஏற்கனவே, இலங்கையில் நடந்த போருடன் தொடர்புடையவர்கள் என்ற காரணத்தினால், தூதுவராக பிரேரிக்கப்பட்டவர்களை கனடா ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறது.

1991ஆம் ஆண்டு தொடக்கம், 1995ஆம் ஆண்டு வரை, பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் சந்திரானந்த டி சில்வா. தேர்தல் ஆணையாளராக இருந்த பின்னர் அவர் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்தார்.

அந்தப் பதவியில் இருந்து விலகிய பின்னர், 1995ஆம் ஆண்டில் கனடாவுக்கான தூதுவராக அவரை நியமிக்க பரிந்துரைத்த போது, கனடா அதனை ஏற்க மறுத்தது.

அதுபோன்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பலகல்லவையும் கூட, கனடா தூதுவராக ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும், கனடாவுக்கு வீசா விண்ணப்பம் செய்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலருக்கும் கூட வீசா வழங்கப்படவில்லை.

போரில் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய பதவிகளில் இருந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆ.ர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களால் கூட கனடாவுக்குச் செல்ல முடியாத நிலை இருக்கிறது. 

இவ்வாறான ஒரு நிலையில், இறுதிக்கட்டப் போரில் பங்காற்றிய விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்கல டயசை இலங்கையின் தூதுவராக கனடா ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது.

இறுதிக் கட்டப் போரில் விமானப்படை மீது சர்வதேச அளவில் பெரியளவில் குற்றச்சாட்டுகள் கூறப்படவில்லை. ஆனால், விமானப்படை பொதுமக்களின் இலக்குகளை குறி வைத்து தாக்கியது என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பாக, செஞ்சோலை குண்டுவீச்சில் 54 மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம், போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

அதுபோல, இறுதிக்கட்டப் போரில் சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை விமானப்படை வீசியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

அதைவிட இறுதிக்கட்டப் போரில், போர்க்குற்றங்களை இழைத்தமாக சர்வதேச ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவத்தின் படைப்பிரிவுகளில், 57, 58, 59 ஆவது பிரிவுகளும் உள்ளடங்கியிருக்கின்றன.

இந்தப் படைப்பிரிவுகளின் கள நடவடிக்கைகளுக்குத் தேவையான விமானப்படை உதவிகளை ஒருங்கிணைத்துக் கொடுத்தவர், விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்லக டயஸ் தான்.

எனவே, மேற்படி படைப்பிரிவுகளின் மீறல்களில் இவருக்குப் பங்கு இல்லை என்று கனடா கருதுவதற்கு வாய்ப்புகள் குறைவு.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் பிரதான அனுசரணை நாடுகளில் ஒன்றாக கனடாவும் இருந்து வருகிறது.

ஜெனிவா தீர்மானத்தில், போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதனை அப்போதைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இப்போதைய அரசாங்கம் அந்த தீர்மானத்துக்கான இணை அனுசரணையில் இருந்து விலகி விட்டது.

இந்த நிலையில், ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நகர்வு குறித்து தீர்மானிக்க வேண்டிய பொறுப்பில் பிரதான அனுசரணை நாடுகள் இருக்கின்றன.

இவ்வாறானதொரு சூழலில், பொறுப்புக்கூற வேண்டிய ஒரு படை அதிகாரியை, தனது நாட்டில் தூதுவராக கனடா ஏற்றுக் கொள்ளுமா? – பொறுத்திருந்து பார்க்கலாம்.