இலங்கையில் கொரோனா குறித்த உண்மை மறைக்கப்படுகிறதா ?

01 Nov, 2020 | 01:40 PM
image

-என்.கண்ணன்

20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் கவனம் முழுமையாக ஒன்று குவிக்கப்பட்டிருந்த சூழலில், கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் தனது கைவரிசையைக் காண்பித்து விட்டது.

ஒன்றுக்கு இரண்டு மிகப்பெரிய கொத்தணிகள்- அதுவும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியிலேயே உருவாகியிருந்த போதும், அது விஸ்வரூபம் எடுக்கும் வரையில், யாருக்கும் தெரியாமலேயே இருந்து விட்டது.

எழுமாற்றான பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், சந்தேகத்துக்குரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், இரண்டு கொத்தணிகளுமே- கையை மீறிச் செல்லும் நிலை ஏற்பட்ட பின்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டன.நாடு இப்போது எதிர்கொண்டுள்ள இந்தப் பாரிய நெருக்கடிக்கு, இரண்டு முக்கியமான காரணங்களை குறிப்பிடலாம்.

முன்னரை விட, இந்தமுறை தொற்று வேகமாக பரவுகிறது, வைரஸ் தனது இயல்பை மாற்றிக் கொண்டிருக்கிறது என்று அரசதரப்பும், சுகாதார அதிகாரிகளும் ஒரு காரணத்தைக் கூறியிருக்கிறார்கள்.

அதில் உண்மை இருந்தாலும், அது அவர்களின் தவறை மறுப்பதற்காக கூறப்படும் ஒரு காரணம் என்றே குறிப்பிடலாம்.

தொற்று பரவிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதில் ஏற்பட்ட தாமதம் இன்னொரு காரணம். அதனை அரசாங்கம் வெளிப்படுத்தத் தயங்குகிறது.

இப்போதைக்கு இந்த இரண்டு கொத்தணிகளும் தான் இருக்கின்றன. ஆனால் இன்னொரு கொத்தணி வெடிப்பு ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அடுத்த கொத்தணி வெடிப்பு வெளிச்சத்துக்கு வரும் வரையில் தான், இப்போதுள்ள பாதுகாப்பான நிலையாவது நீடிக்கும். இப்போது கூட, கொரோனா தொற்று மிகப்பெரியளவில் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையை மறைக்கப்படுகிறதா என்ற வலுவான சந்தேகம் பலருக்கு உள்ளது.

உதாரணத்துக்கு, வடக்கில் பல தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும், கொரோனா தடுப்பு செயலணி வெளியிட்ட பட்டியலில் அவர்கள் உள்ளடக்கப்பட்டதாக தெரியவில்லை.

அவ்வாறாயின், ஏனைய பகுதிகளில் பெருமளவு தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சூழலில், அவர்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படக் கூடும். 

அதேவேளை, தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் போது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார்படுத்தப்பட்ட கட்டில்களின் எண்ணிக்கைக்கும், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருப்பதும் கவனிக்கத்தக்கது.

அதேவேளை, கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஒரு புதிய நடைமுறை கையாளப்படுகிறது. இதன்படி, தொற்றாளர்களுடன் முதல்நிலை தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்துக்கு மேல் இதனை செய்ய முடியாது என்பது ஏற்கனவே அறிந்த விடயம் தான்.

தொற்று சில நூறு பேருக்குள் இருக்கும் வரையில் தான் தனிமைப்படுத்தல் நிலையங்களை பேண முடியும். ஒரே நேரததில் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படும் சூழல் ஏற்பட்டு விட்ட பிறகு, முதன்நிலைத் தொடர்பாளர்களைத் தேடிப்பிடிப்பதே கடினமானது.

அதனைக் கடந்து அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுத்து வைத்திருப்பது அதனை விட கடினமானது. இவ்வாறானதொரு சிக்கல் ஏற்பட்ட பின்னர் தான், வீடுகளுக்குள் தனிமைப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இப்போது, தனிமைப்படுத்தல் நிலையங்களை மூடி விட்டு, அவற்றை முடிந்தளவுக்கு கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் முயற்சிகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனென்றால் இதே வேகத்தில் பரவல் நிகழமானால், அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில், மருத்துவமனைகளில் பெரும் இடநெருக்கடி ஏற்படும். கடந்த வாரம், வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட போது, 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் றோஹண கூறியிருந்தார்.

ஆனால் நாடு முழுவதும் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில், 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களை தனிமைப்படுத்தும் வசதிகளே இருந்தன.

உரிய வசதிகள் இல்லாத காரத்தினால் தான், வீடுகளில் தனிமைப்படுத்தும், முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியான போது, அதனை ஏற்றுக் கொள்ளவும் அரசாங்கம் தயாராக இருக்கவில்லை.

விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, சப்பைக் காரணங்களை கூறிக் கொண்டிருந்தார் இராணுவத் தளபதி.

தனிமைப்படுத்தப்படுவோரில் தங்கி வாழ்பவர்களை பராமரிக்க முடியாத நிலை குறித்து முறையிடப்பட்டதாலும் வளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க முடியவில்லை என்று முறையிடப்பட்டதாலும் தான் இந்த முடிவுக்கு வர நேரிட்டதாக அவர் கூறிய காரணம் நகைச்சுவை தான்.

இப்போதைய நிலையில், தனிமைப்படுத்தல் மாத்திரமன்றி, தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடங்களாக கூட வீடுகள் மாறக் கூடும். வெளிநாடுகளில் அவ்வாறு தான் நடக்கிறது.

மோசமான நிலையில் இல்லாத தொற்றாளர்கள் வீடுகளிலேயே பராமரிக்கப்படும் நிலை விரைவிலேயே உருவாகலாம். அதிகரித்து வரும் தொற்றாளர்களை சமாளிக்க, அரசாங்கத்துக்கு அதனை விட வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படக் கூடும்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால், அதற்கும் அரசாங்கம் விசித்திரமான காரணம் ஒன்றை கூறக் கூடும். இப்போது தொற்று பரவலாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.

அவையிரண்டும் மினுவங்கொட, பேலியகொட கொத்தணிகளில் இருந்து கண்டுபிடிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், இந்த இரண்டு கொத்தணிகளின் மூலம் எதுவென்று இன்னமும் சரியாக அடையாளம் காணப்படவில்லை.

மினுவங்கொட தொற்றின் மூலம், சீதுவவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த உக்ரேனியர்கள் தான் என்று புலனாய்வுத் தகவல் கூறுவதாக இராணுவத் தளபதி கூறியிருக்கிறார்.

ஆனாலும், இதனை இன்னமும் உறுதிப்படுத்திக் கொள்ள கால அவகாசம் கேட்டிருக்கிறார். இவ்வாறு தொற்றின் மூலத்தை அடையாளம் காண முடியாத நிலை தான், சமூகத் தொற்று.

ஆனால் அரசாங்கமும், சுகாதார அதிகாரிகளும் இன்னமும் சமூகத் தொற்று உருவாகவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். சமூகத் தொற்று உருவாகாமல் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. அவ்வாறான பெறுப்பை அரசாங்கம் சரியாக நிறைவேற்றியதா என்ற கேள்வி உள்ளது.

இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கென்றே சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்டார்.

அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னரே, தொற்று தீவிரமான கட்டத்தை அடைந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி நாடு மிகவும் நெருக்கடியான சூழலில் இருந்தபோது, சுகாதார சேவைகள் பணிப்பாளராக இருந்த மருத்துவர் அனில் ஜாசிங்க அந்தப் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டார்.

இந்த மாற்றம் நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் தான், - கடந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசதரப்பு காட்டிய அலட்சியங்களாகவே, கருதப்படக் கூடியவை. 

தொற்றின் உண்மையை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த தவறியதாலும் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும், தான் இந்த நிலை என்பதை நாடே அறிந்திருக்கிறது.

சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படாத்தே இப்போதைய நிலைமைக்கு காரணம் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.

ஆனாலும், அரசாங்கம் இன்னமும் முழுப் பூசினிக்காயை சோற்றில் புதைக்க முயன்று கொண்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலம்பெயர்வில் புதுத்திறன் வளர்த்து உள்நாட்டில் தொழில்...

2023-09-29 18:57:24
news-image

இலங்கை சுற்றுலாத்துறையின் முதுகெலும்பான தேசிய விமான...

2023-09-29 17:50:38
news-image

பொருளாதார நெருக்கடி நூல் விற்பனையிலும் தாக்கம்...

2023-09-29 14:00:32
news-image

38 நிபந்தனைகளை மாத்திரம் நிறைவேற்றியுள்ள இலங்கை...

2023-09-27 14:40:25
news-image

ஒடுக்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவு...

2023-09-27 13:42:35
news-image

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலம் “ஜனாதிபதியின்...

2023-09-27 11:41:14
news-image

சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் ;...

2023-09-26 19:45:02
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48