கெரி  – பொம்பியோ வருகைகள்- ஒரு ஒப்பீடு

01 Nov, 2020 | 01:21 PM
image

-கார்வண்ணன்

“ஜோன் கெரி இலங்கை வந்திருந்த போது, அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், மற்றும் அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். ஆனால், மைக் பொம்பியோ, பிரதமரையும் சந்திக்கவில்லை. எதிர்க்கட்சியினரைத் திரும்பியும் பார்க்கவில்லை”

43 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர், 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர், சுனாமி தாக்கியதை அடுத்து, அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த கொலின் பவல் கொழும்புக்கு வந்திருந்தாலும், அது உத்தியோகபூர்வ – அரசுமுறைப் பயணமாக இருக்கவில்லை.

ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த வாரம் வந்த மைக் பொம்பியோவும், அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.

அமெரிக்க இராஜாங்கச் செயலரின் இரண்டு பயணங்களுக்கு இடையிலான கால இடைவெளி 43 ஆண்டுகளில் இருந்து இப்போது 5 ஆண்டுகளாக குறைந்திருக்கிறது.

ஆனால், ஜோன் கெரியின் அப்போதைய இலங்கைப் பயணத்துக்கும், மைக் பொம்பியோவின் இப்போதைய பயணத்துக்கும் இடையில் பெரிய வேறுபாடுகளை அவதானிக்க முடிந்தது.

2015இல் ஜோன் கெரியின் பயணம், இலங்கையில் அமெரிக்காவுக்கு சாதகமானது என்று கருதப்பட்ட ஆட்சி மாற்றம் ஒன்றுக்குப் பின்னர் இடம்பெற்றிருந்தது.

இலங்கைக்கு எதிராக பொறுப்புக்கூறல் அழுத்தங்கள் சர்வதேச அளவில் உச்சநிலையில் இருந்தபோது, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்கள் குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்துவது, அரசியலமைப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சூழலில் தான், அதனை மையப்படுத்தியே ஜோன் கெரியின் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.

ஜோன் கெரி இலங்கையில் தங்கியிருந்த போது, அரச தரப்புக்குப் புறம்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்களையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும், வர்த்தகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியிருந்தார்.

ஆனால் பொம்பியோவின் பயணம் அவ்வாறானதாக இருக்கவில்லை. ஜோன் கெரியின் பயணத்தில் இருந்து அது முற்றிலும் வேறுபட்டிருந்தது. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பொம்பியோவை, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவரவேற்பதற்குக் கூடச் செல்லவில்லை.

பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர், தாரக பாலசூரியவும், வெளியுறவு செயலர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயும், விமான நிலைய விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் தான் அவரை வரவேற்றனர்.

ஜோன் கெரியை வரவேற்கவும்,, வழியனுப்பவும், அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விமான நிலையத்தில் நின்றிருந்தார்.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன எதற்காக விமான நிலையத்துக்கு வரவேற்கச் செல்லவில்லை என்பது முக்கியமானதொரு கேள்வி.

அதுபோலவே, ஜோன் கெரி இலங்கை வந்திருந்த போது, அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், மற்றும் அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

ஆனால், மைக் பொம்பியோ, ஜனாதிபதியைச் சந்தித்தார், வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தார். பிரதமரையும் சந்திக்கவில்லை.

எதிர்க்கட்சியினரைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஏற்கனவே நிகழ்ச்சி நிரலில் இருந்த போதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - மைக் பொம்பியோ இடையிலான சந்திப்பு நிகழாமல் போனதற்கான காரணங்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.

அதுபோலவே, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்கின்ற மரபையும் பொம்பியோ பின்பற்றவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா ஸ, அமெரிக்காவின் கட்டுக்குள் நிற்பவரில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

அவர் எம்.சி.சி. உடன்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை வெளியட்டிருந்தார். அதனை கிழித்தெறிவேன் என்றும் கூட கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில்  அவரைச் சந்திக்கும் மரபு தவிர்க்கப்பட்டதற்கு, பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் போட்ட குண்டும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

யாலவில் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட விடுதிக்கு சஜித்தும் சென்றிருக்கிறார், அவரை நாங்கள் இரண்டாம் நிலை தொற்றாளராக பார்க்கிறோம் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அதனை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

ஜோன் கெரி இலங்கை வந்த போது, சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து இலங்கை விடுபட்டது போன்ற ஒரு சூழல் தென்பட்டிருந்தது.

2015 ஆட்சி மாற்றம் அத்தகையதொரு உணர்வை அமெரிக்காவுக்கு கொடுத்திருந்தது. அந்த ஆறுதல் அவரிடத்தில் இருந்தது, ஆனால், மைக் பொம்பியோவின் பயணம் அவ்வாறான ஒரு சூழலில் நடந்திருக்கவில்லை.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒரு பனிப்போர் உச்சநிலையை அடைந்து கொண்டிருக்கும் சூழலில் தான், இந்தப் பயணம் நடந்திருக்கிறது.

சீனாவுக்கு எதிரான ஒரு மூலோபாயக் கூட்டை இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் வலுப்படுத்துகின்ற முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ள நிலையில் தான் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது.

அதுவும், சீனாவுக்கு சாதகமான ஒரு மாற்றம் கொழும்பில் நடந்திருப்பதாக நம்பப்படுகின்ற சூழலில், இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

அதற்கும் அப்பால், இலங்கையை மையப்படுத்தி சீனாவும் அமெரிக்காவும் மோதத் தொடங்கியுள்ள நிலையில்- கிட்டத்தட்ட ஒரு பரபரப்பான, பதற்றமான சூழலில் தான், மைக் பொம்பியோ கொழும்பு வந்திருந்தார்.

இந்தச் சூழலில் அவரது கண்களுக்குத் தென்பட்டதெல்லாம் சீனாவும், அதன் அச்சுறுத்தலும் தான். அந்த அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கான வியூகத்துக்குள் இலங்கையை கொண்டு வருவது மட்டும் தான் அவரது ஒரே இலக்காக இருந்தது.

அதற்கான முயற்சிகளில் மட்டும் தான், பொம்பியோ கவனம் செலுத்தியிருந்தாரே தவிர, ஏனைய விவகாரங்கள் எல்லாம் அவரது கண்களுக்குப் பெரியவையாகத் தெரியவில்லை.

ஜோன் கெரியின் பயணத்தின் போது முக்கியத்துவம் வாய்ந்தவவையாக இருந்த பொறுப்புச்கூறல், நல்லிணக்கம், நீதி போன்ற விவகாரங்கள் எல்லாம் பொம்பியோவின் பயணத்தின் போது சிறு துரும்பாகிப் போனதற்கு இது தான் முக்கிய காரணம்.

எவ்வாறாயினும், 2015இல் ஜோன் கெரி வந்திருந்த போது, இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் வெற்றி கண்டிருந்தார்.

ஆனால், பொம்பியோவினால் அவ்வாறானதொரு திருப்தியுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டிருக்க முடியாது என்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18