- லோகன் பரமசாமி

“கடந்த முப்பது வருட கால பகுதியில் அமெரிக்கா சர்வதேச மேலாண்மை நிலையை சிறிது சிறிதாக இழந்து வரும் நேரத்தில் தனது இயல்பான செயற்பாடுகளால் புதியதொரு உலக ஒழுங்கை நோக்கி அமெரிக்காவை திசை திருப்பி விட்டிருக்கிறார் ட்ரம்ப்”

வலைக்காணெளி நகைச்சுவைகளில் சர்வதேச அளவில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக பெரும் இடம் பிடித்த அரசியல் தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருந்து வந்தார். 

நாளை மறுதினம் இடம் பெற இருக்கும் தேர்தல் முடிவுகள் அவரது இருப்பின் எதிர்காலத்தை கூற உள்ள அதேவேளை இந்த நான்கு வருட கால ஆட்சியில் ட்ரம்பின் சாதனைகள் குறித்த மீள்பார்வை ஒன்று செய்யலாம்.

வெளிப்படை தன்மையை தன்னகத்தே கொண்ட அமெரிக்க அரசியல் பலதரப்பட்ட விமர்சகர்களையும் துணிவுடன் கருத்தகளை தெரிவிக்க இடமளிக்கிறது. இதன் அடிப்படையில் அமெரிக்க மக்கள் தொடர்பு நிறுவனங்கள் பல விமர்சனங்களையும் முன்நிறுத்தி உள்ளன.

சர்வதேச அரங்கில் அமெரிக்கா மீண்டும் சிறப்பாக வேண்டும் என்ற தனது கோசத்துடன் பதவிக்கு வந்த தலைவர் ட்ரம்ப். ஆனால் அவர் அவ்வாறு எதையும் செய்து விட வில்லை.

பதிலாக முன்பு எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவை பலவீனப்படத்தி உள்ளார் என்பதுடன், அவமரியாதைக்கும் ஏளனத்திற்கும் பரிதாபத்திற்கும் உரியதான நிலைக்கு இட்டு சென்று விட்டதாக அமெரிக்க உள்நாட்டு ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

சர்வதேச வல்லரசு என்ற மிகப் பெரும் பெயர் கொண்டிருந்த போதிலும் கொரோனா வைரஸ் குறித்த விவகாரத்தில் மிகவும் கவலையீனமாக இருந்து விட்டதன் பலனாக அமெரிக்க சமூக பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனங்களை உலகறிய செய்து விட்டார் என்கின்றனர் வேறு சிலர்.

மேலும் உள்நாட்டில் நிறபேதம், பெண்ணிய எதிர்ப்பு, வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்புவாதம் என்று பலதரப்பட்ட குற்றசாட்டுகளுடன் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களை வலுவிழக்க செய்து விட்டார் எனவும் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.

இதற்கும் மேலாக சீனாவுடன் சுமூகமாக உறவை மீள்வடிவமைப்பு செய்து கொள்வதில் தவறி விட்டார். வட கொரியாவை கிண்டலடித்த போதிலும் அதனுடன் சமநிலையில் பேச்சு வார்த்தையில் இறங்கினார். அதுவும் ஒரு முடிவான ஒப்பந்த நிலையை எட்டாது விடப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்யாவுடன் உறவை சரிவர பேணவில்லை என்று பல குற்றசாட்டுகள் ட்ரம்ப் மீது அமெரிக்க ஆய்வாளர்களாலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதுவேளை, இன்னும் ஒரு தரப்பினர் ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சி காலத்தில் இடம் பெற்ற மாற்றங்களில் உள்ளூர இருக்கும் நன்மைகளின் மீதான நம்பிக்கை கொண்ட பார்வையை முன்வைக்கின்றனர். அடிப்படையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தமது தலைவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் நியாயமற்றவை என்கின்றனர்.

சர்வதேச நாடுகள் அமெரிக்காவின் கடின உழைப்பிலும் அதன் ஒழுங்கு படுத்தலிலும் அதன் நிறுவனமயப்படுத்தப்பட்ட சர்வதேச ஒழுக்கத்திற்கான பாரங்களை சுமைதாங்கும் திறனிலும் கடந்த முப்பது ஆண்டுகளாக இலவச சவாரி செய்து வந்தன. இந்த இலவச சவாரியை ட்ரம்ப் பல இடங்களில் மிகத்திறமையாக அணுகி இருக்கிறார்.

பொதுவான அவரது குணாதிசயங்களான துடுக்காக உடன் எழக்கூடிய கர்வம், தானே தலைவன் என்ற உள்ளூணுர்வுடன் கூடிய அகங்காரம், அறியாமை, எதிலும் அதிக இலாபம் காண வேண்டும் என்ற சிந்தனை போன்ற சாதாரண மனித இயல்புகளை கொண்டே சர்வதேசங்களின் இலவச சவாரி ஏன் அனுமதிக்கப்படுகிறது என்பதை அறிய விளைந்தார்.

இதன் பலனாக உலக யதார்த்த்தை எடுத்து காட்டினார் என்றும் ட்ரம்ப் பற்றி ஒரு சாரார் கூறுகின்றனர்.

அமெரிக்க தேசிய உணர்வுள்ள ட்ரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்காவினால் கடந்த காலங்களில் செலவீனங்கள் கூடிய பாதுகாப்பு இராஜதந்திர நடவடிக்கைகள் தேவையற்றன என்று ஒதுக்கியதன் பலனாக உலக பொறுப்புகள் பலவற்றிலிருந்து அமெரிக்காவை விடுவித்து விட்டார். மறுபுறத்தில் இதில் பல ஆலோசகர்களுடனும் அதிகாரிகளுடனும் பல தடவை முரண்பட வேண்டிய நிலை ஏற்பட்டதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஜனாதிபதி ட்ரம்ப் பதவி ஏற்ற காலத்தில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலை விரித்தாடியது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, ஈராக்கிய, சிரிய பகுதிகளில் தன்னிச்சையான கலீபாஅரசு. ஆட்சி அமைக்கும் திட்டத்தில் இருந்தன. மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் அடிப்படைவாதம் அதியுச்ச நிலையில் இருந்தது.

ஆனால் மத்திய கிழக்கில் அடிப்படைவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதுடன் இஸ்லாமிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமாதான உடன் படிக்கைகள் உருவாக்கப்படுள்ளன.

மத்திய கிழக்கிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் கிழக்காசியாவிலிருந்தும் அமெரிக்க படைகள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளன.

இதனால் கூட்டு நாடுகள் தமது பாதுகாப்பு செலவீனங்களை தாமே கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்பதன் பெயரில் அமெரிக்க படைகள் பல்வேறு நாடுகளிலும் குவிக்கப்பட்டு ஆயுத செலவீனங்கள் உயிரிழப்புகள் என்று தேவை அற்ற பல செலவீனங்களை குறைத்து கொண்டார். அத்துடன் ட்ரம்ப் புதிதாக எந்த ஒரு யுத்தத்தையும் ஆரம்பிக்க வில்லை என்பதை மறந்து விடலாகாது என்கின்றனர் ட்ரம் சார்பு விவாதிகள்.

சீனாவை சர்வதேச வர்த்தக ஒப்பந்த அமைப்பில் (WTO) அனுமதி வளங்கியதன் ஊடாக அமெரிக்காவிலும் உலக சந்தையிலும் சீனா தனது மலிவான பொருட்களை வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டது. ஏற்கனவே அமெரிக்காவினால் நிறுவப்பட்டு பாதுகாத்து வந்த சர்வதேச சட்டஒழுக்க விழுமியங்களை பயன்படுத்தி சீனா தன்னை வளர்த்து கொண்டது.

இது அமெரிக்க பொருட்களின் வியாபாரத்தை பின் தள்ளி விட்டது. இதனை அமெரிக்காவின் பிரதிகூலமாக கண்ட ட்ரம்ப் சீனா மீது புதிய வியாபார வரிகளை கொண்டு வந்தார். சீனா மீது மட்டுமல்லாது வட அத்திலாந்திக் திறந்த சந்தை உடன் படிக்கை மீதும் கட்டுபாடுகளை கொண்டு வந்ததன் ஊடாக அமெரிக்க உள்நாட்டு உற்பத்திக்கு பெரும் பங்களிப்பு செய்தார்.

கடந்த முப்பது வருட கால பகுதியில் அமெரிக்கா சர்வதேச மேலாண்மை நிலையை சிறிது சிறிதாக இழந்து வரும் நேரத்தில் தனது இயல்பான செயற்பாடுகளால் உலக அரங்கில் மீண்டும் மாற்றப்பட முடியாத நகர்வுகளை உருவாக்கியதன் மூலம் புதியதொரு உலக ஒழுங்கை நோக்கி அமெரிக்காவை திசை திருப்பி விட்டிருக்கிறார் என்கின்றனர் பல ஆய்வாளர்கள்.

ட்ரம்ப் பற்றி இத்தகைய விடயங்கள் இருக்கும் நிலையில் அவருக்கான மக்கள் ஆணை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.