-குடந்தையான்

தமிழக அரசியல் களம் 'மருத்துவ கல்வி அரசியல்' பக்கம் திரும்பியிருக்கிறது 'மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமுல்படுத்துவது குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலாது' என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தமிழக அரசியல் களத்தை மருத்துவ கல்விக்கான அரசியல் போராட்ட தளமாக மாற்றியிருக்கிறது. 

இதுகுறித்து தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் வழக்கம்போல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இட ஒதுக்கீட்டு விடயத்தில் இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அத்துடன் இவ்விவகாரம் தொடர்பாக ‘பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும்' என்றும் கடிதம் அவர் எழுதியிருக்கிறார். அவரது இந்த அணுகுமுறை, மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களை மட்டுமல்லாமல், அவர்தம் பெற்றோர்களையும் கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான ராமதாஸ், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து அரசியல் ரீதியான அழுத்தத்துடன் கூடிய தீர்ப்பு ஒன்றை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்துக் கட்சியின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். 

தி.மு.க. மற்றும் பா.ம.க.வின் இந்த  அரசியல் ரீதியான காய்நகர்த்தல்களை உற்று கண்காணித்து வரும் ஆளும் கட்சியான அ.தி.மு.க., இவ்விவகாரத்தில் மௌனம் காப்பதன் பின்னணியில் மத்திய அரசின் அரசியல் அழுத்தம் இருப்பதே காரணம் என்று உணர முடிகிறது.

இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புகளில் மத்திய தொகுப்பிற்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் இது தொடர்பான சட்ட வரையறைகளை மூன்று மாதங்களில் உருவாக்கும் படியும் மத்திய அரசிற்கும், மருத்துவ ஆணையத்திற்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கான அரசியல் பின்னணி அல்லது இத்தகைய மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன்? என்று அனுபவம் வாய்ந்த சட்டத்தரணி ஒருவர் விவரிக்கையில், “அண்மையில் மத்திய அரசு முன்னேறிய பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு அரசு பணிகளில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கலாம்' என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, இருபத்தியோரு நாள்களிலேயே சட்ட வரையறை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தினர். 

'முன்னேறிய வகுப்பினருக்கு' என்றவுடன் விரைவாக செயலாற்றிய மத்திய அரசு, மருத்துவ கல்விக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், பட்டியலின மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் பயனடைய வேண்டும் என்று வரும் போது தமிழக ஆளுநரும் கால தாமதம் செய்கிறார். மத்தியில் ஆளும் அரசும் கால தாமதம் செய்கிறது.

கால தாமதமாக வழங்கப்படும் நீதி பொருத்தமற்றது என்பது மூத்தோர்களின் முதுமொழி. ஆகவே இதனை விரைவுபடுத்த வேண்டும் என்றும், மத்திய பா.ஜ.க. அரசின் சாதிய ரீதியிலான அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தகைய வழக்கினை தமிழக அரசும் \ தி.மு.க.வும் தொடுத்து இருக்கின்றன” என குறிப்பிட்டார். 

இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை இயற்றிய தீர்மானத்தை ஆளுநர் எப்படி நீர்த்துப்போக செய்தாரோ. அதேபோன்றதொரு நிலைப்பாட்டை, தற்போது தமிழக அரசு முன்மொழிந்துள்ள நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பாடசாலையில் பயின்ற மாணவர்களுக்கு 7.5சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன்  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் எடுத்து விடக்கூடாது என்பதற்காக, இவ்விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வெளியான பிறகுதான் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழக அரசு ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது.

தமிழக அ.தி.மு.க. அரசின் இந்த அரசியல் சாமர்த்தியமான அணுகுமுறையை சற்றும் எதிர்பார்க்காத மத்திய ஆளும் தரப்பு வழக்கம்போல் பதிலளிக்காமல் அமைதி காத்து வருகிறது. இதனை துல்லியமாக உணர்ந்த எதிர்க்கட்சியான தி.மு.க., ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை நடத்தி, இவ்விவகாரத்தை மேலும் தீவிரமாக்கி, ஆளுநருக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது.

அரச பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற விவகாரம் அரசியல் ரீதியாக தீவிரமாகிறது என்றவுடன், ஆளுநர் மாளிகை இதுகுறித்து முடிவை அறிவிக்க ஒரு மாதகால அவகாசம் தேவைப்படும் என்றொரு பதிலை உதிர்த்தது. 

அத்துடன் அரச பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது போல், தனியார் பாடசாலையிலும் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வழக்கம்போல் அரசியல் ரீதியான உத்தியையும் கையாண்டது. 

தனியார் வைத்தியசாலை ஒன்றின் திறப்பு விழாவில் பங்குபற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'தமிழகம் மருத்துவ தலைநகரம்' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

இந்த அடையாளத்தை தக்க வைக்க வேண்டும் என்றால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும். அவர்களுக்கு தடையாக இருக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் 15 மற்றும் 50 சதவிகித இடங்களை அதாவது இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களை தமிழக அரசு வலியுறுத்தும் இட ஒதுக்கீட்டின் படி மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதுதான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

தமிழகத்தில் தங்களது கட்சி வளர வேண்டும் என தீவிரமாக பல்வேறு அரசியல் உத்திகளை கையாளும் பா.ஜ.க. தமிழக மக்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் இவ்விடயத்தில் தெளிவான தீர்க்கமான ஒரு முடிவினை எடுத்து அறிவித்தால், அக்கட்சிக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.

தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டு இருப்பதால், இதனை பா.ஜ.க. தலைமை துல்லியமாக அவதானித்து, தமிழக மருத்துவ மாணவர்களுக்கு தேவையான தீர்வினை விரைவாக வழங்கினால் 'மன் கி பாத்' என்ற வானொலி உரையாடல் மூலம் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் பேச்சால், தமிழகத்தில் அக்கட்சி வளர்வதை விட வேகமாக, பிரதமரின் நன்மதிப்பு அதிகரிக்கும் என்பது தான் கள யதார்த்தம்.