கிக்கேஸ் டோரண்ட்ஸ் இணையதளத்தில் புதிய படங்கள், இசை இறுவெட்டுக்கள் என அனைத்தும் முறையான அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. இணையத்தில் படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு இது பெரிய உதவியாக அமைந்தது. 

சுமார் 100 கோடி டொலர் மதிப்புள்ள படங்கள், இசை இறுவெட்டுக்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக முறைப்பாடு எழுந்ததையடுத்து அமெரிக்க நீதித்துறையால் இந்த இணையதளம் நேற்று முடக்கப்பட்டது. இணையதளத்தின் நிறுவனர் ஆர்டம் வாலின் போலந்து நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இணையதளம் முடக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் KAT.am. என்ற பெயரில்(Kickass Torrents) மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. 

இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது குறித்து அதன் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்தியில் “முடக்கப்படுவதை தடுக்கும் வகையில் cloud server தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இணையதளமானது, மேம்படுத்தப்பட்டு, புதுப் பொலிவுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் கையடக்கத்தொலைபேசியில் எளிதில் பயன்படுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளனர்.