ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் - ட்ரம்பா ? பைடனா ?

01 Nov, 2020 | 08:55 AM
image

- சதீஷ் கிருஷ்ணபிள்ளை

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒட்டுமொத்த உலகிற்கும் மிக முக்கியமான நாள்.

அன்றைய தினம் அமெரிக்க மக்கள் தமது வரலாற்றின் 59ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 46 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும்.

இது அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவாகப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய போட்டி மாத்திரம் அல்ல.

மாறாக, சீர்குலைந்த ஜனநாயகத்தில் எஞ்சியிருக்கும் விழுமியங்களைத் தக்க வைப்பதா அல்லது அமெரிக்க தேசம் எதேச்சாதிகார சிக்கலுக்குள் மென்மேலும் வழுக்கிச் செல்ல இடமளிப்பதா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய நிகழ்வாகும்.

டொனால்ட் ட்ரம்ப் என்ற மனிதர் ஜனநாயகத்திற்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தலாகத் திகழ்கிறார் என்று அரசறிவியல் அறிஞர் நொம் சொம்ஸ்க்கி கூறுகிறார்.

இன்றைய உலகம் மனிதகுலத்திற்கு எதிரான சவால்களை எதிர்கொள்கிறது.

இந்த சவால்களை டொனால்ட் ட்ரம்ப் இடது கையால் புறந்தள்ளுவது மாத்திரமன்றி, நிலமையை மோசமாக்குவார் என்பது ஒட்டுமொத்த உலகின் கருத்தாகும்.

எனவே, சர்வதேச அரசியலைப் பொறுத்தவரையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் என்ற பிம்பத்தைத் தோற்கடித்தலே மிக முக்கியமானதாகத் திகழ்கிறது.

அமெரிக்க மீண்டும் பாசிச தேசமாக மாறி வருகிறது என்ற கருத்தை புறந்தள்ள முடியாது. அதனை கொவிட்-19 நெருக்கடி எற்படுத்திய சிக்கல்களில் தெளிவாகத் தெரிகின்றன.

அமெரிக்க சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. இன, மத, நிற பேதங்களின் அடிப்படையில் மக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

நிறுவனமயப்படுத்தப்பட்ட இனவாதம் வெளிப்படையாகவே அசுரத்தனம் காட்டுகிறது.

இன்று ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படுவதில்லை. எதிலும் வியாபாரம் என்ற இலக்கு முதன்மைப்படுத்தப்படுகிறது. பொருளாதார வல்லமை உடையவர்கள் மென்மேலும் செல்வம் சேர்க்கையில் உழைக்கும் வர்க்கம் பின்தள்ளப்படுகிறது.

அமெரிக்க சமூகத்தில் அச்சமும், சந்தேகமும் தலைவிரித்தாடுகின்றன. மக்கள் பலம் இழந்தவர்களாக உணர்கிறார்கள். பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சமூக ஊடகங்கள் செல்நெறியைத் தீர்மானிக்கின்றன.

எந்த விடயங்கள் மீது கவனத்தைக் குவிக்க வேண்டுமோ, அந்த விடயத்தில் இருந்து கவனத்தைத் திசை திருப்பி, சமூகத்தை ஆகவும் இழிநிலைக்குத் தள்ளக்கூடிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்தப் போக்கை உச்சத்தைக் கொண்டு வந்தவராக டொனால்ட் ட்ரம்ப் நோக்கப்படுவதால், அவரை அமெரிக்க மக்கள் வாக்குகளால் தோற்கடிக்க வேண்டுமென ஒட்டுமொத்த உலகமும் விரும்புகிறது. அதன் காரணமாக, தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்று கொவிட்-19 நெருக்கடியால் ஆகக்கூடுதலான தொற்றுக்களும், மரணங்களும் நிகழ்ந்த தேசமாக அமெரிக்கா மாறியிருக்கிறது. இந்த நிலைமைக்கு டொனால்ட் ட்ரம்பின் பொறுப்பற்ற செயற்பாடுகளே முதன்மைக் காரணம் என்பது உள்ளங்களை நெல்லிக்கனி.

எனவே, எதிர்வரும் தேர்தலில் அமெரிக்க மக்கள் ட்ரம்பைத் தோற்கடிப்பார்களென நம்ப முடிந்தாலும் கூட, அதனை உறுதியாகக் கூற முடியாதிருப்பது துரதிருஷ்டமான விடயம்.

இதற்குக் காரணம் அமெரிக்காவின் தேர்தல் முறை. இன்று கருத்துக் கணிப்புக்களில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை விடவும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலையில் திகழ்வது உண்மை தான்.

இந்தக் கருத்துக் கணிப்புகள் மெய்யாக்க முடியுமா என்பது அமெரிக்காவின் சிக்கலான தேர்தல் முறையில் தான் தங்கியிருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆகக்கூடுலான அமெரிக்கர்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹி லாரி கிளின்டனுக்கு வாக்களித்தார்கள். எனினும், அமெரிக்க தேர்தல் முறையின் கீழ், டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதைக் குறிப்பிட முடியும்.

அமெரிக்கா என்பது ஐம்பது மாநிலங்கள் அடங்கிய தேசம். ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நடைமுறையில் ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் வாக்காளர்களின் அபிலாஷைகளும் சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை ஜனநாயகத்தின் உச்சமென ஒரு சாரார் கருதுவார்கள். இது இன்றைய காலத்திற்குப் பொருத்தமற்ற பித்துக்குளித்தனம் என மறு சாரார் கூறுவார்கள்.

அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பிரச்சினை உண்டு. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தாம் குறித்த பிரச்சினையைக் கையாளும் விதத்தை சொல்லி வாக்காளர்களின் மனதைக் கவர வேண்டும்.

தேசிய அளவிலான பிரச்சனைகளும் வாக்காளர்களின் விருப்பு வெறுப்புக்களை தீர்மானிப்பதாக அமையும். அமெரிக்க ஜனாதிபதியை வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்வதில்லை என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு எந்த வேட்பாளர் வெற்றி பெறுகிறார் என்பதன் அடிப்படையிலே வெற்றி-தோல்வி தீர்மானிக்கப்படுகிறது.

இதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ள வேண்டுமாயின், அமெரிக்காவின் தேர்தல் கல்லூரி (Electoral College) என்ற கோட்பாட்டை அறிந்து கொள்வது அவசியம். இதுவொன்றும் பாடம் படித்துக் கொடுக்கும் கல்லூரி அல்ல.

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கும் விசேட தெரிவாளர்கள் அடங்கிய ஜனநாயக கட்டமைப்பாகும்.

இந்தத் தேர்தல் கல்லூரியில் 538 பேர் இடம்பெறுவார்கள். இவர்களில் எந்த வேட்பாளருக்கு குறைந்தபட்சம் 270 வாக்குகள் கிடைக்கிறதோ, அவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

538 என்ற இலக்கம் ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இது அமெரிக்க மக்களவையை அடிப்படையாகக் கொண்ட சூத்திரமாகும்.

அமெரிக்க மக்களைக்கு காங்கிரஸ் என்று பெயர். காங்கிரஸ் இரு சபைகளைக் கொண்டது. முதலாவதாக செனட் சபையைக் குறிப்பிடலாம். அதில் மாநிலத்திற்கு இரண்டு பேர் என்ற விகிதாசாரத்திற்கு அமைய 100 பேர் அங்கம் வகிக்கிறார்கள். இரண்டாவதாக பிரதிநிதிகள் சபை.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் சபைக்கு அங்கத்தவர்கள் அனுப்பப்படுவார்கள்.

அதாவது குறைந்த சனத்தொகை உடைய மாநிலத்தில் இருந்து குறைந்தளவு பிரதிநிதிகள். கூடுதல் சனத்தொகை உடைய மாநிலத்தில் இருந்து கூடுதலான பிரதிநிதிகள். மொத்தமாக பிரதிநிதிகள் சபையில் 435 பேர் அங்கம் வகிப்பார்கள். அதன்படி ஆராய்ந்தால், ஒட்டுமொத்த காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 535 ஆகும்.

இனி தேர்தல் கல்லூரி என்ற விஷயத்திற்கு வருவோம். தேர்தல் கல்லூரிக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தெரிவாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஒரு மாநிலத்தில் இருந்து அனுப்பப்படும் தெரிவாளர்களின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தில் இருந்து காங்கிரஸிற்கு செல்லும் பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்கு சமமானதாக இருக்கும்.

உதாரணமாக கொலராடோ மாநிலத்தை எடுத்துக் கொள்வோமே. இந்த மாநிலத்தில் இருந்து சென்று செனட் சபையிலும் (2 பேர்), பிரதிநிதிகள் சபையிலும் (7 பேர்) அங்கம் வகிப்பவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருப்பதால், இதில் இருந்து தேர்தல் கல்லூரிக்கு ஒன்பது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஆக, சகல மாநிலங்களில் இருந்தும் தேர்தல் கல்லூரிக்குத் தெரிவாகும் தெரிவாளர்களின் எண்ணிக்கை 535 ஆக இருக்க வேண்டும். ஆயினும், காங்கிரஸில் பிரதிநிதிகள் எவரையும் கொண்டிருக்காத கொலம்பியா மாவட்டத்திற்கும் 3 தெரிவாளர்கள் வழங்கப்படுவதால் இந்த எண்ணிக்கை 538 ஆக அதிகரிக்கிறது.

இந்தத் தேர்தல் கல்லூரிக்கு தெரிவாளர்கள் தெரிவு செய்யப்படும் முறை அலாதியானது. ஏதாவதொரு மாநிலத்தில் எந்தவொரு வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ, அந்த வேட்பாளரது கட்சியில் இருந்து தெரிவாளர்கள் தேர்தல் கல்லூரிக்கு அனுப்பப்படுவார்கள்.

மீண்டும் கொலராடோ மாநிலத்தை உதாரணமாகக் கொள்வோம். இந்த மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாகக் கருதினால், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒன்பது பேர் தேர்தல் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் கல்லூரி வாக்கெடுப்பு நடைபெறும்போது, தெரிவாளர்கள் வாக்களிப்பார்கள்.

முன்னைய உதாரணத்தின் பிரகாரம், கொலராடோ மாநிலத்தில் இருந்து தெரிவு செய்யப்படக்கூடிய தெரிவாளர்கள் ஜனநாயகக் கட்சி தெரிவாளர்கள் ஜோ பைடனுக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் பைடனுக்கு வாக்களிப்பது மரபாக இருந்த போதிலும், அவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாறியும் வாக்களிக்க முடியும். அப்படியான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. டிசம்பர் 17 வாக்கெடுப்பில் ஜனாதிபதியாகத் தெரிவானவர் யார் என்பது ஜனவரி ஆறாம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த முறையில் போட்டியாளர்களின் வெற்றியைத் தீர்மானிப்பதில் ஒவ்வொரு மாநிலமும் முக்கியத்துவம் பெறுகிறது. சில மாநிலங்கள் ஜனநாயகக் கட்சியின் கோட்டையாகவும், சில மாநிலங்கள் குடியரசுக் கட்சியின் கோட்டையாகவும் கருதப்படுகின்றன. ஊசலாடும் மாநிலங்களும் உண்டு.

இன்றைய சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளைத் தீர்மானிக்கக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றில் கொவிட்-19 நெருக்கடி ஏற்படுத்தியுள்ள தாக்கம் பிரதானமானது. இந்த ஆட்கொல்லி நோய் 234,000 இற்கு மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டுள்ளது.

மறுபுறத்தில் ஜோர்ஜ் புளொயிட் உள்ளிட்ட கறுப்பின அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ஆட்சேபித்து, அமெரிக்கா முழுதும் நடைக்கும் ஆர்ப்பாட்டங்கள்.

எதிர்காலத்தில், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வழிவகுக்கும் பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வாபஸ் பெறும் தீர்மானம் என்ற விடயமும் உண்டு.

சீனாவுடனான போட்டி உள்ளிட்ட வெளிவிவகாரக் கொள்கைகளில் ட்ரம்ப் ஏற்படுத்திய தன்னிச்சையான மாற்றங்கள் போன்ற விடயங்களையும் புறக்கணிக்க முடியாது.

இருந்தபோதிலும், இவை யாவும் அமெரிக்க வாக்காளர்கள் மீது செலுத்தக்கூடிய தாக்கத்தை விடவும், உலக மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தும் விடயங்களாகும்.

இவற்றைத் தாண்டி, ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனி பிரச் சினைகள் உண்டு. இந்த மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏற்படுத்தும் தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தான் வாக்களிப்பார்கள்.

உதாரணமாக விஸ்கொன்சின் என்ற மாநிலத்தை ஆராயலாம். இந்த மாநிலத்தை கறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்ட பிராந்தியமாக விஸ்கொன்சின் மாநிலத்தை அடையாளப்படுத்த முடியும்.

இந்த மாநிலத்தில் இருந்து தேர்தல் கல்லூரிக்கு பத்து தெரிவாளர்கள் அனுப்பப்படுவார்கள். மாநில சனத்தொகையில் வெள்ளைக்காரர்களின் எண்ணிக்கை 86.2 சதவீதமாகும். ஆபிரிக்க வம்சாவழி கறுப்பின அமெரிக்கர்களின் எண்ணிக்கை 6.3 சதவீதமாக இருக்கிறது.

விஸ்கொன்சின் ஆர்ப்பாட்டங்கள் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி காலத்தில் அவருக்கு கறைபடிந்த அத்தியாயம். கறுப்பினத்தவர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைகள் காரணமாக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ட்ரம்பிற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று யாரேனும் கருதினால், அது கற்பிதத்தின் அடிப்படையிலான தீர்மானமாகவே அமையும்.

எண்ணிக்கையின் அடிப்படையில்  வெள்ளைக்காரர்கள் அதிகம். அந்த மாநிலத்தின் வாக்காளர்களுக்கு கறுப்பினத்தவர்களின் பிரச்சினையை விடவும் தொழில்வாய்ப்பின்மை என்ற பிரச்சினை தீவிரமாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே வாக்குகளை செலுத்துவார்கள்.

ட்ரம்பின் கொள்கைகளை இனவாதமென உலகம் சித்தரித்தாலும், அந்தக் கொள்கைகள் மூலம் தமக்கு பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும் என விஸ்கொன்சின் மாநில வாக்காளர்கள் கருதும் பட்சத்தில், ட்ரம்பிற்கு கூடுதலான வாக்குகள் செலுத்தப்படலாம். அப்படி நடந்ததால், விஸ்கொன்சின் மாநிலத்தில் இருந்து தேர்தல் கல்லூரிக்கு அனுப்பப்படும் தெரிவாளர்கள் பத்துப் பேரின் ஆதரவும் அவருக்கே கிடைக்கும்.

ஒரு கறுப்பினத் தந்தையை கழுத்து நெறித்துக் கொண்டதை ஒட்டுமொத்த உலகமும், ஏன் பெரும்பாலான அமெரிக்கர்களும் ஆட்சேபித்தபோதிலும், அந்த எதிர்ப்பு விஸ்கொன்சின் மாநிலத்தின் தேர்தல் பெறுபேறுகளில் பிரதிபலிக்க மாட்டாது. சில சந்தர்ப்பங்களில், இந்தப் பெறுபேறுகளின் மூலம் முழு உலகமும் வெறுக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகலாம். இது தான் அமெரிக்காவின் தேர்தல் முறைமை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21