கொரோனா தொற்றுக்குள்ளாகிய இந்தியாவின், தமிழக விவசாய அமைச்சர் ஆர். துரைக்கண்ணு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த 72 வயதான அமைச்சர் ஆர். துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.15 மணியளவில் உயிரிழந்துள்ளதாக காவிரி வைத்தியசாலை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12 ஆம் திகதி இரவு சேலத்தில் உயிரிழந்தார்.அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக துரைக்கண்ணு சென்று கொண்டிருந்தார்.

இதன்போது விழுப்புரம் அருகே அவர் பயணித்துக்கு கொண்டிருந்தபோது, திடீரென ‍அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு வைத்தியசாலையில் முதலுதவி பெற்ற அவர், சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சென்னையிலுள்ள காவிரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு மூச்சுத் திணறல் இருந்தது. இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு கொரோனாவுக்கான சிகிச்சையும் அதன் பாதிப்புகளுக்கான சிகிச்சையும் தொடர்ந்து வழங்கப்பட்டன. இருந்தபோதும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்தது.

அவருக்கு எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேனில் அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு பல இணை நோய்களும் இருந்துவந்தன. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு எக்மோ கருவி பொறுத்தப்பட்டது.

அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், 24 மணி நேரத்திற்குப் பிறகே அவரது உடல்நலம் குறித்துத் தெரியவரும் என வெள்ளிக்கிழமை அன்று வைத்தியசாலை அறிவித்தது. 

இந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு 11.15 மணியளவில் உயிரிழந்துள்ளார்.