பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் இங்கிலாந்தை முடக்குவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

இங்கிலாந்தின் கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளமையினாலும், கொவிட்-19 இரண்டாவது அலை ‍தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கும் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் போரிஸ் ஜோன்சன் தேசிய முடக்கல் நிலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந் நாட்டு ஊடகங்களில் முடக்கல் நிலை தொடர்பில் செய்திகள் கசிந்ததையடுத்து, அவசரமாக கூடப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜோன்சன், இங்கிலாந்து முழுவதும் ஒரு மாத முடக்கல் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் டிசம்பர் 2 ஆம் திகதி காலை வரை நீடிக்கும் என்று கூறினார்.

எனினும் கல்வி, தொழில், உடற்பயிற்சி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவது அல்லது நோயாளர்களை கவனித்தல் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக மாத்திரம் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறந்த நிலையில் இருக்கும். பப்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படுவதுடன் அனைத்து அத்தியாவசிய சில்லறை விற்பனை நிலையங்களும் மூடப்படும்.

கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது வேறு மாற்று நடவடிக்க‍ை இல்லாத காரணத்திற்காகவும், நாங்கள் தற்போது முடக்கல் நிலைக்கு செல்லா விட்டால், நாட்டில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படக் கூடும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மார்ச் 23 முதல் ஜூலை 4 வரை நீடித்த இங்கிலாந்தின் முதல் தேசிய முடக்கலுக்காக ஜோன்சன் அரசியல் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டார்.

அவர் மார்ச் மாத இறுதியில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அம் மாத இறுதியில் குணமடைந்தார்.

இங்கிலாந்தில் தற்போது 1,014,793 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 46,645 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.