(எம்.மனோசித்ரா)      

நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு கர்ப்பிணி தாய்மார் அல்லது அண்மையில் பிரசவம் இடம்பெற்ற தாய்மார் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகயீனம் ஏற்பட்டால் அதற்காக சிகிச்சை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தக் கூடாதென சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை குடும்ப சுகாதார பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கர்ப்பிணி தாய்மார் மற்றும் புதிதாக பிரசவம் இடம்பெற்ற தாய்மார் சுகயீனமடையும் போது தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகை தராமையால் துரதிர்ஷ்டவசமான  சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான தாய்மாருக்கு தடிமன், இருமள், சுவாசிப்பதில் சிரமம், அதிக இரத்தப் போக்கு, வலிப்பு, உடல் நோவு உள்ளிட்ட எவ்வித நோய் அறிகுறிகள் அல்லது சுகயீனம் ஏற்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறான நிலைமைகளின் போது துரிதமாக சிகிச்சை பெற வேண்டியது அத்தியவசியமானதாகும். எந்த காரணத்திற்காகவும் சிகிச்சை தாமதமடையக் கூடாது. 24 மணித்தியாலங்களும் சுகயீனமுற்ற தாய்மாருக்கு நிச்சயம் மருத்துவ சேவை வழங்கப்படும்.

கர்ப்பிணி தாய்மார் வைத்தியசாலைக்கு செல்லும் போது அவர்கள் உள்ள பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமாயின் அவர்கள் தமது கிளினிக் அட்டையை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்லது பிரச்சினைகளின் போது பிரதேச குடும்ப சுகாதார அதிகாரிகள் , பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு அல்லது சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் 1999 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை தெரிவித்து சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்தோடு 1990 என்ற அவசர மருத்துவ வண்டிக்கு (அம்புலன்ஸ்) அழைத்து அதன் மூலமும் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.