( செ.தேன்மொழி)


நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்ததாக கூறப்படும் கைதியின் மரணம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ,தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபர், இன்று சனிக்கிழமை காலை சிறை அறைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகள் கடுவல பதில் நீதிவான் தலைமையில் இடம்பெற்று வருவதுடன், இதன்போது உயிரிழந்த நபருடன் சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகள் நால்வரிடமும் , நீதிவான் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, சட்ட வைத்திய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். 

உயிரிழந்த நபரின் மரண பரிசோதனைகளின் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும், சம்பவம் தொடர்பில்  உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.