(ஆர்.ராம்)

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் ட்சீ சென்ஹொங் (Qi Zhenhong) இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். 

ட்சீ சென்ஹொங் பி.சி.ஆர்.பரிசோதனையினை நிறைவு செய்து சீன ஈஸ்டன் ஏயார்லைன்ஸூக்கு சொந்தமான எம்.யு231 விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தினை வந்தடைந்ததாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. 

புதிய தூதுவர், அடுத்து வரும் இருவாரங்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் தன்னை ஈடுபடுத்தவுள்ளதாகவும் விமான நிலையத்தில் வைத்து வைபவரீதியான வரவேற்பினை இலங்கையின் தற்போதைய நிலைமை கருதி மறுத்து விட்டதாகவும் சொற்ப அளவிலான சீன தூதரக இராஜதந்திர சேவையில் உள்ளவர்களே அவரை வரவேற்றும் நிகழ்வில் பங்கேற்தாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 

1965ஆம் ஆண்டு பிறந்த இவர் 1988ஆம் ஆண்டு முதல் சீன இராஜதந்திர சேவையில் செயற்பட்டு வருகின்றார். அத்துடன் சீன சர்வதேச கற்கைகள் நிறுவனத்தின் தலைவரான இவர்,  பொருளாதார நிபுணர் என்பதோடு 

 பீஜிங்கில் உள்ள இராஜதந்திர சேவைகளுக்கான பணியகத்தில் செயற்பாட்டு பிரதி பணிப்பாளராக செயற்பட்டுள்ளதோடு சீன பிரிட்டிஷ் கூட்டுக்குழுமத்தின் இரண்டாம் நிலை செயலாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய தூதுவரான, ட்சீ சென்ஹொங் (Qi Zhenhong)  இலங்கை வந்தடைந்ததும் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இலங்கை வந்தடைந்தும் இந்து மா கடலின் முத்து என போற்றப்படும் இலங்கையின் அழகு, உற்சாகம் மற்றும் நட்புறவை ஆழ்ந்த முறையில் உணர்ந்து கொள்கின்றேன். சீன அரசு மற்றும் மக்களின் நம்பிக்கைக்கு தோள் கொடுத்து, நட்பார்ந்த இலங்கைக்கான தூதராக வருகின்றேன். நான் பொறுப்பேற்க வேண்டிய கடமை மிகவும் முக்கியமானதாகவும் பிரகாசமாகவும் உள்ளது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான நட்புறவு வாழையடி வாழையாக நிலவி வருகிறது. இருதரப்பும் ஒன்றுக்கொன்று நேர்மையாக உதவியளித்து, தலைமுறை தலைமுறையாக நட்பார்ந்து பழகும் நெடுநோக்கு ஒத்துழைப்பு நண்பர்களாவர். இருநாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு, குறிப்பாக 2014ஆம் ஆண்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் இலங்கையில் பயணம் மேற்கொண்டதிலிருந்து, பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் பெரும் சாதனைகளைப் பெற்று, சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் நெருக்கமான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்தி வருகின்றன. 

நீண்ட வரலாறுடைய இருநாட்டுறவு இன்னும் பசுமையாக உள்ளது. பரஸ்பர நெடுநோக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் கொவிட்-19 நோய்த் தடுப்புக்கான கூட்டுப் போராட்டத்தில் இருநாட்டுறவு மேலும் உயர்ந்து, நாடுகளுக்கிடையே இருதரப்பு நட்புறவுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது.

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதராக, சீன மற்றும் இலங்கை பணியாளர்களுடனும் நண்பர்களுடனும் இணைந்து பாடுபட்டு, இருநாட்டு ஜனாதிபதிகளின் ஒத்த கருத்துக்களை உணர்வுபூர்வமாகச் செயல்படுத்தவுள்ளேன். 

அத்துடன் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒன்றுக்கு ஒன்று உதவியளித்து நட்புடன் பழகும் நெடுநோக்கு ஒத்துழைப்பையும் முன்னேற்றி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம் மற்றும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளின் மூலம் இருநாட்டு மக்களுக்கு மேலும் பெரும் மனநிறைவைக் கொண்டு வரவுள்ளேன்.  அத்தோடு, பிராந்திய அமைதி, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னெடுத்துச் செல்வதையும் எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.