(நா.தனுஜா)
இலங்கையில் வளி மாசடைவு பெருமளவிற்கு உயர்வடைந்திருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உயர் வளி மாசடைவு அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் அவதானிப்பின் படி, காற்றில் இருக்க வேண்டிய துகள்களின் அளவு பெருமளவிற்கு அதிகரித்திருப்பதுடன் இது பொதுமக்களின் சுகாதாரத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் நிலவிய அதிக காற்று மற்றும் மழை காரணமாக வளி அதிகளவில் மாசுபட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்நிலையம் தெரிவித்திருக்கிறது.
உயர் அழுத்தத்துடனான காற்றின் ஊடாக இந்திய வளிமண்டல எல்லையிலிருந்து இலங்கையின் வளிமண்டல எல்லைக்கு மாசடைந்த வளி ஊடறுத்துப் பிரவேசிப்பதாலும் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று உலக வளி/ காற்று தரப்படுத்தல் சுட்டியின் அளவிடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் விளையாட்டுக்கள் உள்ளடங்கலாக வெளியில் நடமாடும் செயற்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.