500 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தம் ஒன்றின் கீழ், புதுடில்லி ஜப்பானுடன் கூட்டாக இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கின்ற கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இந்தியா வியாழக்கிழமை அழுத்தமாகக் கூறியிருக்கிறது.

இலங்கையில் உள்நாட்டு அரசியல் குழப்பநிலை காரணமாக 2016 ஆம் ஆண்டில் இருந்து அந்த திட்டம் ஸ்தம்பிதமடைந்திருக்கிறது.

சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் வரைபடத்தில் இடம்பெறும் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இந்தியாவும் ஜப்பானும் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் 2019 மே மாதத்தில் கைச்சாத்திட்டிருந்தன.

2020 ஜூலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த திட்டத்துக்கு கிளம்பிய எதிர்ப்புக்களை கருத்திற்கொண்டு அதுவும் பொதுத்தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் திட்டத்தை மீளாய்வுசெய்யுமாறு உத்தரவிட்டார்.

அதற்கு பிறகு திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் எந்த நகர்வுமேயில்லை. துறைமுக ஊழியர்கள் மத்தியிலும் திட்டத்துக்கு எதிர்ப்பு இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கைத் திட்டமாக முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஊழியர்கள் விரும்புகிறார்கள்.

மண்டலமும் பாதையும் திட்டத்தின் மூலமாக இலங்கைக்குள் அதிகரித்துவரும் சீன ஊடுருவல்களுக்கு ஒரு எதிரடியாக கொழும்பு துறைமுக திட்டத்தை இந்தியாவைப் பொறுத்தவரை அது மிகவும் முக்கியமானதாகும்.

"தற்போதைய சூழ்நிலையில் தற்போதைய கட்டத்தில் இந்தியா - இலங்கை உறவுகளை ஆழமாக்குவதற்கான சிறந்த வழி கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்தவதேயாகும்" என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஏசியான் இந்திய நிலையம், உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில், பாத்ஃபைண்டர் உட்பட பல ஆய்வு நிறுவனங்கள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கில் உரையாற்றியபோது கூறினார்.

புதிய உலக ஒழுங்கு

கொரோனாவைரஸ் தொற்றுநோய்க்குப் பின்னரான  'புதிய உலக ஒழுங்கு' ஒன்று பற்றி பேசிய பாக்லே, நிலுவையில் இருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை ஆழமாக்குவதற்கு இதுவே தருணம் என்று குறிப்பிட்டார்.

இந்த புதிய உலக ஒழுங்கு விடயத்தில் நிச்சயமான ஒன்று அது நிச்சயமற்றது என்பதாகும். அதை முக்கியமாக கவனத்திற்கொள்ளவேண்டும்.

எண்ணற்ற நிச்சயமற்ற தன்மைகளும் எண்ணற்ற சவால்களும் இருக்கின்றன. இன்றைய நிச்சயமற்றத்தன்மையை உருவகப்படுத்துவதில் கொவிட் - 19 க்கு நிகராக வேறு எதுவும் நின்றுபிடிக்கமுடியாது என்றும் உயர்ஸ்தானிகர் கூறினார்.

காலமும் அலையும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை என்று கூறியதன் மூலம் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்தவேண்டிய அவசியத்தை பாக்லே அடிக்கோடிட்டுக்காட்டினார் என்றபோதிலும், இந்தியா இலங்கையின் நம்பகமான ஒரு பங்காளியாக தொடர்ந்து இருக்கும் என்று கூற அவர் தவறவில்லை.

"பொருளாதார மீட்சி பற்றி நாம் பேசும்போது, எதிர்காலம் பற்றி நாம் பேசும்போது காலம் முக்கியமானதாகும்.

காலத்துடனும் திட்ட நடைமுறைப்படுத்தல்களுடனும் நாம் முன்னோக்கி நகரவில்லையானால், இந்த திட்டங்களும் அவற்றின் கோட்பாடுகளும் காலத்துக்கொவ்வாதவையாக மாறிவிடும் என்பது மாத்திரமல்ல, சவால்மிக்கவயாகவும் வேறு நிகழ்வுகளினால் முந்திச்செல்லப்பட்டுவிடவும் கூடும்.

"பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கட்சி ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றபிறகு, சீனாவின் செலவாக்கை குறைக்கும் பிரதான நோக்குடன் கிழக்கு கொள்கலன் முனையம் உட்பட பெருவாரியான இருதரப்பு திட்டங்களை முன்னோக்கி நகர்த்துவதற்கு இந்தியா நாட்டத்தைக் காட்டிவந்திருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடாட்டங்களில் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பேசிய பாக்லே, கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 

(நயனிமா பாசு - த பிறின்ற்)