பிரான்ஸின் நைஸ் நகரில் 3 பேரை கத்தியால் குத்தி கொலை செய்தவர் இரு தினங்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன?

 

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேம் என்ற தேவாலயத்திற்குள் நேற்று வியாழக்கிழமை மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். 

மர்மநபர் நடத்திய இந்த கொடூர கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்திருந்தனர். தாக்குதல் நடத்திய நபர் பெண்ணொருவரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்திருந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸாரால் தாக்குதல் நடத்திய நபர் சுடப்பட்டு  தற்போது வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்

இது ஒரு "இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்" என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தால் பாடசாலைகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை மூவாயிரத்திலிருந்து ஏழாயிரமாக அதிகரிப்பதாகத்  ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்

மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் வட மேற்கு பகுதியில் உள்ள பாடசலை ஒன்றிற்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலிகள் இந்த தாக்குதலில் இருப்பதாக கூறப்படுகிறது.

முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களைத் தனது மாணவர்களிடத்தில் காட்டியதாக கூறப்படும் சாமூவேல் பட்டி என்ற ஆசிரியர் தலைவெட்டி கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸில் பதற்றம் அதிகரித்தது. கேலிச் சித்திரங்களை பிரசுரிப்பது நாட்டின் உரிமை என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் பேசியது மற்றும் தீவிர இஸ்லாமியவாதத்தை ஒடுக்கும் அரசின் முயற்சிகள் ஆகியவை துருக்கி மற்றும் பிற முக்கிய முஸ்லிம் நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியது.

பிற நாட்டு தலைவர்கள்.

மலேசிய முன்னாள் பிரதமர்

பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதல் ; மலேசிய முன்னாள் பிரதமரின் டுவிட்டர் பதிவு நீக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

பிரான்ஸில் தேவாலயத்தில் நடந்த படுகொலையை கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் நடவடிக்கையில் இந்தியா துணைநிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில்

பிரான்சில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் நாங்கள் அதிர்ச்சியும், வருத்தமும் அடைகிறோம். இது போன்ற தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.  

பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் பிரான்ஸுடனான எங்களின் ஒற்றுமையில் நாங்கள் உறுதியாகவும் நிற்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மோரிசன்

'இது ஒரு பயங்கரவாதியின் காட்டுமிராண்டித்தனத்தின் மிகக் கொடூரமான மற்றும் கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலாகும், மேலும் இது மிகவும் வலுவான முறையில் கண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.