காஷ்மீரில் இந்தியாவின் ஆளும் இந்து தேசியவாத கட்சியின் மூன்று உறுப்பினர்களை சந்தேகத்திற்குரிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கின் குல்கம் மாவட்டத்தில் மூன்று பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் (பா.ஜ.க.) உறுப்பினர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த கார் மீது நேற்று வியாழக்கிழமை பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது காயமடைந்த மூவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கட்சியின் இளைஞர் பிரிவில் உறுப்பினர்களாக இருந்ததாகவும், ஒருவர் குல்கம் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்ததாகவும் பா.ஜ.க கூறுகிறது.

இந் நிலையில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர்களை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை கண்டித்துள்ளதுடன், காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் காப்பற்றப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

காஷ்மீரில் இந்தியப் பிரஜைகள் நிலம் வாங்க அனுமதிக்கும் சட்டம் புது டெல்லியில் இயற்றப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.